விளையாட்டை மையப்படுத்திய உதகை 200 மலர்க் கண்காட்சி...!!

விளையாட்டை மையப்படுத்திய உதகை 200 மலர்க் கண்காட்சி...!!

உதகையில் தொடங்கிய ரோஜா மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகையில், ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.  கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்,  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில், உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. 

3 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  கடந்த 1995-ம் ஆண்டு 4 புள்ளி 40 ஏக்டர் பரப்பளவில், 35 ஆயிரம் ரக  ரோஜா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு,  இந்த ரோஜா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவில் ரோஜா மலர்களுக்கென்றே தனியாக உள்ள ஒரே பூங்கா, உதகை ரோஜா பூங்கா என்பது, இதன் கூடுதல் சிறப்பாகும். 

ரோஜா கண்காட்சியின் சிறப்பம்சமாக 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு 30 அடி உயரத்தில் ஈபில் டவர் உருவாக்கப்பட்டள்ளது.  சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஈபில் டவர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 

தற்போது, ஐ.பி. எல். தொடர் நடைபெற்று வரும் நிலையில், 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு CSK, கிரிக்கெட் பால், பேட், ஸ்டெம்ப், ஷூ மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இறகு பந்து, கால்பந்து, ஆக்கி, போன்றவைகள் ரோஜா மலர்களால் வடிவமைத்து அழகுற காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி சிறுவர்களை கவரும் வகையில், மலர்களால் யானைகள், மிக்கி மவுஸ், மஞ்சள் பை, பிரம்மாண்ட நுழைவாயில், மற்றும் 40,ஆயிரம்  ரோஜா மலர்களைக் கொண்டு "உதகை 200" வடிவம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவந்தது வருகிறது. மேலும், கிட்டார், வீணை, மயில், வண்ணத்துப் பூச்சி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களும் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதனை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தனர். இந்த ரோஜா கண்காட்சி கண்களுக்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்ச்சியூட்டும் விருந்தாக அமைந்துள்ளது. 

இதையும் படிக்க:  அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்...!!