தொழிற்சாலையில் வெளியேற்றப்பட்ட கழிவு நீர்...! மாசடைந்த குளம்...!

தொழிற்சாலையில் வெளியேற்றப்பட்ட கழிவு நீர்...! மாசடைந்த குளம்...!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் இரும்பு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக, இந்த தொழிற்சாலை மழை நீரோடு சேர்த்து கழிவு நீரையும் வெளியேற்றியதாகவும், இதனால்அப்பகுதியில் உள்ள செங்குளத்தில் கழிவுநீர் கலந்து குளம் மாசடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கழிவு நீரை குடித்து கால்நடைகள் இறந்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதற்கு அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த புகார் குறித்து பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள நீர் ஓடையில் தொழிற்சாலையின் கழிவு வெளியேற்றப்பட்டதும், ஓடைகள் வழியாக அருகில் உள்ள செங்குளத்தில் கழிவுநீர் கலந்து குளம் மாசடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து இரும்பு உற்பத்தி தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள், கழிவுநீர் வெளியேறியது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிட்டுள்ளனர். தொழிற்சாலை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்த பின்னர் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி...! வெளியான வாக்குமூல வீடியோவால் பரபரப்பு...!