தென்காசியில் காதல் திருமணம் செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் அருகே உள்ள வைத்தியலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் வயது. இவர் தற்போது கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடையநல்லூர் தாலுகா அச்சம்பட்டி அருகே உள்ள கோணமலை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் வடிவம்மாள். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
குத்தாலிங்கமும், வடிவம்மாளும் 2021ம் ஆண்டு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு இருவரும் நாகர்கோவிலில் பயிற்சி பெற்றபோது காதலித்து வந்த நிலையில் தற்போது உதவி ஆய்வாளர்களான குத்தாலிங்கமும், வடிவம்மாளும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பாதுகாப்பு வழங்கக் கோரி தென்காசி அனைத்து மகளிர் காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்து கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர்களே பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தாம்பரம் ஆட்டோ ஓட்டுனர் கொலை... தொடரும் விசாரணை!!