சிலிண்டர் வெடித்த கோர விபத்து... பார்வை இழக்கும் அபாயத்தில் சிறுவன் !!

ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், பார்வை குறைபாடு உள்ளிட்ட பலத்த காயங்களால் கடுமையாக அவதியறும் தனது 13 வயது மகனுக்கு உதவுமாறு, தாய் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
சிலிண்டர் வெடித்த கோர விபத்து... பார்வை இழக்கும் அபாயத்தில் சிறுவன் !!

திருச்சி : கடந்த அக்டோபர் 2ம் தேதி திருச்சி மேலரண் சாலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து பலூன் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், அவ்வழியே சென்ற ரவிக்குமார் என்ற மாட்டு ரவியிடம் கடையை பார்க்கக்கூறி விட்டு அனார்சிங் தண்ணீர் பிடிக்கச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது பெரும் சத்தத்துடன் திடீரென ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இந்த கோர விபத்தில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க தனது தாய் சித்ரா என்பவருடன் ஜீவானந்தம் என்ற 13 வயது சிறுவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஹீலியம் சிலிண்டர்  வெடித்ததில் சிறுவன் ஜீவானந்தத்தின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. குறிப்பாக கண்களைச் சுற்றி சிறுகற்கள் தாக்கியதால் பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

சென்னையில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் மட்டுமே கண்பார்வை தொடர்பாக உறுதியாகக் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும், அந்த அளவுக்கு வசதியில்லை எனவும் வேதனையுடன் கூறுகிறார் சித்ரா.

தான் மட்டுமே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டி உள்ளதால் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், தனது மகனுக்கு கண்பார்வை கிடைக்க முதலமைச்சர் உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாலைமுரசு செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் பகுர்தீன்..

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com