"செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பயன்பாட்டினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்" என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில், பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு ( responsible Artificial intelligence) மையம் எனும் அமைப்பு இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குனர் காமகோடி, டிஜிட்டல் இந்தியா தலைமை செயல் அதிகாரி அபிஷேக் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மையம் மூலம், அரசு மற்றும் தனியார் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பான கொள்கை ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாக இது உருவாக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, "ஒரு காலத்தில் மென்பொருட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுத்தோம். ஆனால், தற்போது மென் பொருட்கள் தானாக யோசித்து செயல்பட தொடங்கி விட்டன. அவற்றை எவ்வாறு நாம் கட்டுப்படுத்துவது என்பது குறித்தான கடமை தற்போது ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாகத்தான் தற்போது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளை கண்காணிக்க உள்ளது. மேலும் ஒரு செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும் போது அது எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்க உள்ளது. குறிப்பாக வங்கி நிர்வாகம் குறித்த ஒரு செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கு கணிதவியல் நிபுணர்கள் மற்றும் வங்கி மேலாளர்களின் ஆலோசனை முக்கியம் என்பது குறித்தான ஆலோசனைகளை அதன் தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், அரசு துறைகள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு குறித்த வரைமுறைகளையும் உருவாக்க உள்ளதாகவும் மேலை நாடுகளில் பயன்படுத்தும் ஒரு செயற்கை நுண்ணறிவை அப்படியே இங்கு பயன்படுத்த முடியாது என்பதால், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு என தனித்தனியான தரவுகளை அதற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்தால் வேலைவாய்ப்பு குறையும் என சிலர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வேலை வாய்ப்பானது இன்னும் அதிகரிக்க உள்ளது என கூறினார். மேலும் தற்போது,மருத்துவம்,கல்வி, உற்பத்தி ஆகிய துறைகளில் முதல் கட்டமாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 'பாஷனி' என்னும் செயற்கை நுண்ணறிவை தயார் செய்து வருவதாகவும் அந்த செயற்கை நுண்ணறிவு ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்தை ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செயற்கை பொறுப்புள்ள நுண்ணறிவு மையத்தின் (centre for responsible Artificial intelligence) பொறுப்பாளர் பேராசிரியர் ரவீந்திரன்,தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் இந்த அமைப்பை தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம் என கருதுவதாக தெரிவித்தார். மேலும் தனியார் துறைகளில் இருந்து எங்களை அணுகினாலும் அவர்களுக்கும் எந்த விதமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும் என்கிற ஆலோசனையை வழங்குவோம் என தெரிவித்தார்.
இதையும் படிக்க:தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்!