பெங்களூரில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்... 5 பேர் கைது!!

பெங்களூரில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்... 5 பேர் கைது!!
Published on
Updated on
2 min read

தீவிரவாத தாக்குதலில் ஈடுபட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஐந்து தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் உள்ள ஹப்பாள் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட சுல்தான் பால்யா என்ற பகுதியில் தலைமறைவாக உள்ள ஐந்து தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக அந்த இடத்தில் நுழைந்து ஐந்து நபர்களை கைது செய்தது மட்டுமில்லாமல் அவர்களிடம் இருந்து ஏழு நாட்டு துப்பாக்கிகள் 45 தோட்டாக்கள் வாக்கி டாக்கிகள் கத்தி மற்றும் 19 கைபேசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஆர் டி நகர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சுனைத், சோஹில், ஓமர், ஜாகிர், முதாசிர் மற்றும் பைசல் என்று 6 குற்றவாளிகள் கைதாகி பரப்பன அக்ரகார சிறையில் இருந்தனர். அப்போது 2008 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டு தற்பொழுது சிறையில் உள்ள டி நசீர் என்ற தீவிரவாத கைதியுடன் 6 நபர்களும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டனர். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நசீர் ஆறு நபர்களையும் வெளியே பிணையில் சென்ற பிறகு பெங்களூரு நகரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த அவர்களை மூளை சலவை செய்துள்ளான். பிணையில் வந்த ஆறு நபர்களில் சுனைத் ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் நசீர் மற்றும் வெளிநாட்டில் பதுங்கியுள்ள சுனைத் ஆகிய இருவரின் வழிகாட்டுதலின்படி பெங்களூரு நகரில் 5 பேரும் பதுங்கி இருந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட சதி திட்டங்களை தீட்டு வந்துள்ளனர்.

இதற்கு தேவையான துப்பாக்கி தோட்டா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்க, சுனைத் வெளிநாட்டில் இருந்தவாறு அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிரவாத கைதிகளுடனும் தொடர்பில் இருந்து 5 பேர் இருவரின் வழிகாட்டுதலின்படி பெங்களூருவில் நாசாகார சதியை அமல்படுத்த ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சாட்சியில்லாமல் பேசிக்கொள்வதற்காக வாக்கி டாக்கி வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் 19 கைபேசிகளை கொண்டு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன், நேற்று இரவு அவர்கள் தங்கி இருந்த இடத்தை அதிரடியாக முற்றுகையிட்ட காவல்துறையினர் ஐந்து நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஏழு நாட்டு துப்பாக்கிகள் 45 தோட்டாக்கள் வாக்கி டாக்கிகள் கத்தி மற்றும் 19 கைபேசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக வெளிநாட்டில் உள்ள சுனைத்தை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், எங்கெங்கு, எவ்வாறு தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்தனர் என்பது குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி முகமது ஷாரிக் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஷாரிக் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவேறாத நிலையில், மீண்டும் பெங்களூருவில் 5 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com