ஆதார் முகவரி புதுப்பித்தல்...! “குடும்பத் தலைவர்” முறை அறிமுகம்..!

ஆதார் முகவரி புதுப்பித்தல்...! “குடும்பத் தலைவர்” முறை அறிமுகம்..!

ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குடும்பத் தலைவர் என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செய்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

ஆதார் அட்டையில் இருப்பிடச் சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது,  குடும்பத்தலைவர் (ஹெச்ஓஎஃப் - ஹெட் ஆஃப் தி ஃபேமிலி) முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், குடும்பத்தலைவர் தனது முகவரியை மற்ற குடும்ப உறுப்பினர்களான மனைவி, தந்தை, தாய், மகன்கள், மகள்கள், உடன் பிறந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்றும், யுஐடிஏஐ இந்த ஏற்பாட்டை வழங்கியுள்ளது. ‘மை ஆதார்’ என்ற இணைய பக்கத்தில் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். 

இதற்கு குடும்பத்தலைவரின் ஆதார் எண்ணை சரிப்பார்த்தல் நடைமுறையை பூர்த்தி செய்து பின்னர், குடும்பத்தலைவருடன் உறவுமுறை ஆவணச் சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது விண்ணப்பதாரருக்கும், குடும்பத்தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு அவர்களது பெயர்கள், குடும்ப அட்டை, திருமண சான்றிதழ் போன்ற ஆவணக்களை ஆதாரமாகச் சமர்பித்து குடும்பத்தலைவரோடு இணைக்கலாம். இந்த உறவு முறைக்கான ஆவணம் இல்லாதபட்சத்தில் யுஐடிஏஐ வழங்கியுள்ள குறிபிட்ட வடிவத்தில் குடும்பத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழை பயன்படுத்தலாம்.

இந்த சேவைக்கான கட்டணம் ரூ.50. இதனை செலுத்திய பின்னர், குடும்பத்தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும். தொடர்ந்து 30 நாட்களுக்குள் குடும்பத்தலைவர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது என மத்திய மின்னணு தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.     

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com