சோதனை வளையத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா...தொடர் கைதாகும் நிர்வாகிகள்!

சோதனை வளையத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா...தொடர் கைதாகும் நிர்வாகிகள்!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 106 பேரை கைது செய்துள்ளனர்.  

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது புகார்:

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது, பயிற்சி வழங்கியது மற்றும் மக்களை பயங்கரவாத செயலுக்கு தூண்டியது என, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அண்மையில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்த அமைப்பு மீது புகார் கூறப்பட்டதை அடுத்து, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சோதனை நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.

10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை:

இந்த நிலையில், இன்று அதிரடி திருப்பமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிஎப்ஐ நிர்வாகிகள் மற்றும்  சோதனைக்கு இடையூறாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நள்ளிரவு முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!

‘NIA Go BACK’ முழக்கம்:

கேரளாவிலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் வீடுகளில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோன்று, ஆந்திராவின் கர்ணூல் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை அறிந்து, அங்கு திரண்ட ஆதரவாளர்கள் ‘NIA Go BACK’ என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

பலர் கைது:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும், மகராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில், சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். அதேபோல், நவி மும்பையிலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மேற்குவங்கத்திலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்திய நிர்வாகிகள் வீடுகளில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பீகாரின் புர்னியா பகுதியிலும், துணை ராணுவ படையுடன் சேர்ந்து, காலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

106 நிர்வாகிகள் கைது:

இந்தநிலையில் இந்த சோதனையில், வலைதள சாட், டிஜிட்டல் கருவிகள், ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 11 மாநிலங்களிலும் தற்போது வரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 106  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.