கார்கில் போர் வெற்றி தினம்... நாடு முழுவதும் இன்று விஜய் திவாஸ் அனுசரிப்பு!!

கார்கில் போர் வெற்றி தினம்... நாடு முழுவதும் இன்று விஜய் திவாஸ் அனுசரிப்பு!!

கார்கில் போரின் வெற்றியை நினைவு கூறும் கார்கில் விஜய் திவாஸ், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போரில் ஈடுபட்டது.

60 நாட்கள் நடைபெற்ற இந்த போர், கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் மீண்டும் இந்தியாவின்  கட்டுப்பாட்டிற்கு வந்த பின் ஜூலை 26 நாள் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் நாள் கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில், திராசில் நிறுவப்பட்டுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, முப்படைகளில் தலைமைத் தளபதி அனில் சவுகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி ஹரிகுமார், விமானப் படைத் தளபதி வி ஆர் சவுத்ரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர். 

அதனைத்தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கார்கில் போர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மிக் 29 ரக போர் விமானங்கள் மரியாதை செலுத்தின.

அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கார்கில் வெற்றி நினைவிடத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்தியுள்ளார். அதே போல், சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் லெப்டினண்ட் ஜென்ரல் கரன் பீர் பிரார் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க || மாத்திரை, ஊசியை விட, இதை குடித்தால் வலி பறக்கும்...அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மது!!