கேரளாவின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கிய தமிழ்நாடு அரசிற்கு கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன. பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர் வழங்க கேரளா மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக நீர்வளத்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஆழியார் அணைக்கு வந்த கேரளா மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் சித்தூர் தாலுகாவில் உள்ள குன்னங்காட்டுப்பதி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறி கேரளாவுக்கு ஆழியார் அணையிலிருந்து 400 கன அடி குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்ற தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கேரளாவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் தர உறுதி அளித்தனர். இதனை அடுத்து நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இன்று பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கும் பொழுது கேரளா குடிநீர் தட்டுப்பாடு நிவர்த்தி ஆகும் வகையில் அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனையடுத்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நன்றி தெரிவித்தார்.