கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை! பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்!

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை! பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்!

கர்நாடக மாநிலம் முழுவதும் 15 அதிகாரிகளை குறிவைத்து 53 இடங்களில் லோக் ஆயுக்தா நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம் தங்க ஆபரணங்கள் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பிகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஊழல் செய்யும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் மீது அவ்வப்போது இவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

நேற்று காலை கர்நாடக மாநிலம் முழுவதும், 15 உயர் அரசு அதிகாரிகளை குறி வைத்து 53 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு நகர் வளர்ச்சி துறை, மைசூரு நகர் வளர்ச்சி துறை, மின்சாரத் துறை, கிராம பஞ்சாயத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, பதிவுத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உயர் பதவியில் உள்ள 15 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பெங்களூரு நகரில் பெங்களூரு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் ரமேஷூக்கு தொடர்புடைய 4 இடங்களில் சோதனை நடத்தியதில் 1.4 கோடி மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் 4.20 கோடி சொத்து ஆவணங்கள் வெளிநாட்டு மதுபானங்கள் என வருமானத்திற்கு அதிகமாக 5.6 கோடி மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் தொழில் துறை இணை இயக்குநர் நாராயணப்பா தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடத்திய நிலையில் 22,50,000 மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் 2 கோடி 36 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என மொத்தமாக 2 கோடி 58 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து மாநிலம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பிறகு மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு தெரியவரும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com