ஒடிசா இரயில் விபத்து: சீரமைப்பு பணிகள் தொடக்கம்! 

ஒடிசா இரயில் விபத்து: சீரமைப்பு பணிகள் தொடக்கம்! 

ஒடிசாவில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் -ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 288 போ் உயிாிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனா். இந்நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் உட்பட 43 பேர் கொண்ட மருத்துவ மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

ரயில் விபத்தில் சிக்கிய 1,175 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 793 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளதாக ஒடிசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினா், விமானப்படையினா் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  7-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரயில்கள், ரயில்வே மற்றும் சாலை கிரேன்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி செய்தியாளா்களிடம் தொிவிக்கையில், தடம் புரண்ட ரயில்களின் மீதமுள்ள இடிபாடுகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் தொடரும் எனவும் தொிவித்துள்ளாா். 

இந்நிலையில் ஜீன் 7ஆம் தேதி மீண்டும் பாலசோர் வழியாக இரயில் சேவை தொடங்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com