”ஒரு அடி நீள ஜடை உள்ளவர்கள் அறிவாளியாக முடியாது”- பாஜகவிற்கு பீகார் துணை முதலமைச்சர் பதிலடி

”ஒரு அடி நீள ஜடை உள்ளவர்கள் அறிவாளியாக முடியாது”- பாஜகவிற்கு பீகார் துணை முதலமைச்சர் பதிலடி
Published on
Updated on
1 min read

பாஜகவுடனான கூட்டணியை உடைத்து மீண்டும் மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.  அன்றிலிருந்து பாஜக நிதிஷ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

நிதிஷ்குமார்-பாஜக உறவு முறிவு:

நிதிஷ்குமாரின் பிரிவைத் தொடர்ந்து பாஜக அவரை துரோகி என விமர்சித்தது.  பாஜகவின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஏற்கனவே முதலமைச்சர் நிதிஷை பாம்பு என விமர்சித்ததை தொடர்ந்து தற்போது துணை முதலமைச்சர் தேஜஸ்வியை திருடனின் மகன் என விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் போர்:

2020 சட்டமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக அளித்த வாக்குறுதிகள் குறித்து தேஜஸ்வி யாதவ் பேசிய வீடியோவின் திருத்தப்பட்ட பதிப்பை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.   தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவதில் இருந்து தவறி விட்டார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேஜஸ்வி முதலமைச்சரானால் பீகார் மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என பேசியிருந்த வீடியோவை கிரிராஜ் வெளியிட்டிருந்தார்.

ஒரு அடி நீள ஜடை:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முழு வீடியோவையும் வெளியிட்டார் தேஜஸ்வி.  வெட்கமின்றி செயல்படாதீர்கள் என்றும் ஒரு அடி நீளமான ஜடை ஒருவரை அறிவாளியாக மாற்றாது என்றும் முழு வீடியோவையும் பாருங்கள் எனவும் கிரிராஜை தாக்கி பேசியுள்ளார் தேஜஸ்வி.

அந்த வீடியோவின் திருத்தப்படாத பதிப்பில் முதலமைச்சரானால் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் ஆனால் தற்போது துணை முதலமைச்சராக இருப்பதாகவும் கூறியுள்ளார் தேஜஸ்வி.  மேலும் இது குறித்து முதலமைச்சர் அவருடன் பேசியுள்ளதாகவும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் தேஜஸ்வி.

திருடனின் மகன்:

ஒரு அடி நீள ஜடை என தாக்கியதைத் தொடர்ந்து தேஜஸ்வியை திருடனின் மகன் என கூறியுள்ளார் கிரிராஜ் சிங்.  தீவனத் திருடனின் மகன் மகாத்மா ஆக மாட்டான் எனவும் மீண்டும் மிருக காட்சி சாலையில் மண் திருடுவான் எனவும் தாக்கி பேசியுள்ளார் கிரிராஜ் சிங்.  மேலும் நிதிஷ் குமார் மீண்டும் ஊழல் குற்றச்சாட்டில் லாலு குடும்பத்தையே பதவி நீக்கம் செய்வார் எனவும் கூறியுள்ளார்.

பீகார் மதச்சார்பற்ற அரசு:

மேலும் ஒரு அடி நீள ஜடை என்ற விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பீகாரின் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் தலைவர்கள் இந்து மத அடையாளங்களைத் தாக்கி பேச தொடங்கியுள்ளன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com