சத்தீஸ்கரில், தவறிவிழுந்த ஸ்மார்ட் போனை கண்டுபிடிக்க அணையின் நீரை வீணாக்கிய உணவுத்துறை ஊழியரின் வழக்கில் அவருக்கு உதவிய உயரதிகாரிக்கு 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரியான ராஜேஷ் விஷ்வாஸ் என்பவர் சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள கேர்கட்டா அணைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அணையின் மீதிருந்து தனது நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவரது செல்போன் தவறி அணைக்குள் விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்த உள்ளூரை சேர்ந்தவர்களை அழைத்து அவரது செல்போனை தேடச்சொல்லி இருக்கிறார்.
எவ்வளவு தேடியும் செல்போன் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை எடுப்பதற்காக அந்த அணையில் இருந்த நீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற நினைத்துள்ளார். இதனையொட்டி அவருக்கு அணையில் இருந்த நீரை வெளியேற்ற உதவக்கோரி சதீஷ்கர் மாநில நீர் மேலாண்மை துறை உயரதிகாரி ஒருவர் உதவியுள்ளார். அவர் அணையில் வேலை செய்த பணியாளருக்கு வாய்மொழி உத்தவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து 2 ராட்சத பம்புகளை வைத்து அணையின் 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படும் நீரை வீணாக்கியதாக கூறப்படுகிறது. இது அம்மாநிலத்தில் சர்ச்சையாக எழவே ராஜேஷ் விஷ்வாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த விவகாரத்தில் ராஜேஷ் விஷ்வாசுக்கு உதவிய உயரதிகாரிக்கு 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:நெல்லையில் பெப்பர் ஸ்பிரே அடித்து 1.5 கோடி கொள்ளை!