பா.ஜ.க.வில் இணைந்தால் தான் பதவியா? அப்படிப்பட்ட பதவியே தேவையில்லை... ரசிகர்கள் காட்டம்..!

பா.ஜ.க.வில் இணைந்தால் தான் பதவியா? அப்படிப்பட்ட பதவியே தேவையில்லை... ரசிகர்கள் காட்டம்..!
Published on
Updated on
2 min read

முடிவடையும் கங்குலியின் பதவிக்காலம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு தேர்வானார். கங்குலியோடு, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வாகியிருந்தார். இவர்களது பதவிக்காலம் வரும் 19-ம் தேதியோடு முடிவடையும் நிலையில் பி.சி.சி.ஐ.யின் பொதுக்குழுக்கூட்டம் 18-ம் தேதி கூட்டப்பட இருக்கிறது.


அடுத்த தலைவர் ஆகிறாரா ரோஜர் பின்னி?

நடக்கவிருக்கும் கூட்டத்தில் ரோஜர் பின்னி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிய ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என தகவல்கள் வருகிறது.

இரண்டாம் முறையாக தலைவராகும் ஜெய்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை இரண்டாம் முறையாக தலைவராக்கிய நிலையில் கங்குலிக்கு மட்டும் ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பல காலமாக கங்குலியை கட்சிக்குள் இழுப்பதற்கான மறைமுக வேலைகளை பார்த்து வந்ததாகவும், கட்சியில் சேர்வதற்கு கங்குலி மறுத்து வந்ததாகவும் தகவல்கள் பரவுகின்றன.

பாஜகாவில் சேராதது தான் காரணமா?

பா.ஜ.க.வில் சேராததன் காரணமாகதான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி மறுக்கப்பட்டது என்று மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திரிணாமூல் காங்கிரசுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாலும்தான் கங்குலியை கழற்றி விட்டுள்ளனர் என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், பா.ஜ.க.வில் சேர்ந்தால்தான் பதவி கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட பதவியே தேவையில்லை எனவும் கங்குலி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com