106 கோடி ரூபாயில் 2 வெள்ள தணிப்பு பணிகள்....!!!

106 கோடி ரூபாயில் 2 வெள்ள தணிப்பு பணிகள்....!!!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஏப்ரல் மாதம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 106 கோடி ரூபாயில் 2 வெள்ள தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார்.  மேலும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் கைவிடப்படவில்லை என்ற அவர், தமிழ்நாட்டில் 70 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

சென்னை குடிநீர் தேவைக்காக மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற 44 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும் எனவும் 3 ஆயிரம் கோடியில் 'நடந்தாய் வாழி காவிரி'  திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட துரைமுருகன்,  கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் நெல்லையில் 7 வெள்ள தடுப்பு பணிகள் சுமார் 58 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இதேபோல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 15 இடங்களில் 70 கோடியில் புதிய தடுப்பணைகள் அமைக்கப்படும் எனக் கூறிய அவர் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஏப்ரல் மாதம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

நாகை, தஞ்சையில் 2 இடங்களில் கடல்நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில் 13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதையும் படிக்க:  ஹீரோவாக கலக்கப்போகும்  சூரி..! ரசிகா்கள் எதிா்பாா்க்கும் விடுதலை!!