குறுநில மன்னர்களின் ஆட்சி...! அன்புமணி ராமதாஸ் சூசகம்...!

குறுநில மன்னர்களின் ஆட்சி...! அன்புமணி ராமதாஸ் சூசகம்...!


திருவண்ணாமலை மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
வேலூர் மாவட்டத்தை பிரிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டு தற்போது வேலூர் மாவட்டமானது ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக அந்த பகுதிகள் நல்ல வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்கின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டமும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி எனப் பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டமானது திருநெல்வேலி மற்றும் தென்காசி எனப் பிரிக்கப்பட்டது. இப்படி பல மாவட்டங்கள் உருவாகக் காரணமே மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் தான் என பெருமிதம் கொண்டார். 
தொடர்ந்து பேசிய அவர் திருவண்ணாமலை மாவட்டத்தையும்  இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், கீழ்ப்பனாத்தூர் , கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் என மொத்தம் 8 சட்டமன்ற  தொகுதிகள் உள்ளன . அவற்றை  இரண்டு மாவட்டங்களில் சரி பாதியாக முறையே  நான்கு நான்கு தொகுதிகளாகப் பிரிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சுமார் 27 இலட்சம் மக்களைக் கொண்டுள்ளது. பரப்பளவில் ஒரு தனி நாடாகவே பிரிக்கவல்லது. அத்தகைய சிறப்பினை கொண்டது இந்த மாவட்டம். இருப்பினும் மக்கள் தங்களது குறைகளை முறையிட அரசு அலுவலர்களைக் காணவோ, அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்திக்கவோ நெடும்தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இம்மாவட்டதை கண்டிப்பாக இரண்டாகப் பிரிக்கவேண்டும் என கோரினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் ஆகியும் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற தாமதிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். 

 இது மட்டுமல்லாமல் கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி எனப் பல மாவட்டங்களும் இன்னும் பிரிக்கப்படவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நிர்வாகத்தின் பலன்கள் முறையே சென்றடையும் எனக் கூறினார். ஏழை மக்கள் பயனடைவர். எனினும் இன்னும் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த மாவட்ட பகுப்பு இன்னும் நடைபெறாததற்கு பல அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சாடினார். இன்னும் மேற்கூறிய சில மாவட்டங்களில் குறுநில மன்னர்களின் ஆட்சி நடைபெறுகிறது எனவும் அவர்களில் பெரும்பாலானோர் திமுக கட்சி ஆதரிக்கும்  குறுநில மன்னர்கள் எனவும் சூசகமாகக் கூறினார் . குறுநில மன்னர்கள் தங்களது ஆட்சிக்கு கீழ் பல தொகுதிகளை வைத்திருக்கவே விரும்புவர். மக்களைப்பற்றி பெரிதாகக் கவலைகொள்ள மாட்டார்கள். தனக்கான நிர்வாகப்பதவிகளில் மட்டுமே குறியாக இருப்பார்கள் எனக் கூறினார். 

இதையும் படிக்க:

https://www.malaimurasu.com/Rail-laying-machine-overturned-Rail-service-affected