கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு... சென்னையில் சோதனையிடும் என்.ஐ.ஏ..!

கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் பட்டியலை தயார் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம்

கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு... சென்னையில் சோதனையிடும் என்.ஐ.ஏ..!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையும் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பில்  ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

விசாரணையில் அவர் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு

உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் வெடி பொருட்கள், சிலிண்டர், இஸ்லாமிய சித்தாந்தம் உட்பட 75 பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு வருகிற 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

சென்னையில் தொடரும் சோதனை

இந்த நிலையில் என்.ஐ.ஏ நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின் படி, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை உட்பட 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை 4 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி உட்பட 5 இடங்களில் வழக்கில் தொடர்புடையவர்களின் இடங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

பல பேரிடம் கைமாறிய கார்

கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷ் முபின் பயன்படுத்திய கார் பல பேரிடம் கைமாறி இருப்பது விசாரணையில் தெரிய வந்ததால், காரை பயன்படுத்திய நபர்களின் பட்டியலை தயாரித்து அவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் கார் விற்பனையில் ஈடுபட்டதாக புதுப்பேட்டையை சேர்ந்த நிஜாமுதின் என்பவரை என்.ஐ.ஏ விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு

மேலும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் தமிழ்நாடு காவல்துறையினர் தனியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்... ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?

குறிப்பாக சென்னையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக 18 நபர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், இன்று சந்தேகிக்கும் 4 நபர்களின் வீடுகளில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

வடசென்னையை குறிவைக்கும் தமிழ்நாடு காவல்துறை

சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவூதின், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் ஆகியோரின் வீடுகள் உட்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறையினரும் தனியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பற்றிய தகவல் வெளிவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.