உரிமை தொகை; திமுக-வினருக்கு மட்டுமே பயன்படும் ஜெயக்குமார் விமர்சனம்!

உரிமை தொகை; திமுக-வினருக்கு மட்டுமே பயன்படும் ஜெயக்குமார் விமர்சனம்!

குடும்ப தலைவிகளுக்கு 1000ரூபாய் உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் என்று சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட உள்ளதால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போவதாக மயிலாடுதுறையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிளித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதிஒதுக்கீடு செய்து மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு திமுக ஆட்சியில் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் காணொளி வாயிலாக மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்நிலையில் அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோருடன் வந்து புதிதாக துவங்கப்பட்ட தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை நேற்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை திமுக அரசு முறையாக வழங்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1058 பேருக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு வரும்போது அதிமுக ஆட்சியில் விசைப்படகுகளுக்கு தேவையான டீசல் மெக்கானிக்குகளை அனுப்பி அதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் அரசு ஏற்றதாக குறிப்பிட்ட அவர்,  திமுக ஆட்சியில் படகுகளுக்கு 1200 லிட்டர் டீசல் உள்ளிட்ட செலவுகளையும் மீனவர்களின் தலையில் வைத்து வஞ்சிக்கின்ற அரசாக திமுக அரசு உள்ளதாக விமர்சித்தார்.

இரண்டு கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை, ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உரிமை தொகை பெற தகுதியுடையவர்களை சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுக்க படவிருப்பதால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும், கடலை நம்பி வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை கட்டமைப்பு, புதிய துறைமுகங்கள், மீனவர்களுக்கு தேவையான சாதனங்களுக்காக வருடம் தோறும் ஆயிரம் கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீனவர்களுக்கான பட்ஜெட்டில் நிதி குறைப்பு செய்யப்பட்டு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க:''தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது'' தயாநிதி மாறன் பேட்டி!