வாரிசு இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ்? அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு!

வாரிசு இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ்? அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு!

வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசாணையில் திருத்தம்செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த சங்கரனின் மகன் சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பும் இறந்துவிட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாத நிலையில், தங்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரிகளும் பெரம்பூர் வட்ட ஆட்சியரிடம் கடந்த மே மாத இறுதியில் விண்ணப்பித்துள்ளனர்.

தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, உரிய வாரிசு சான்றிதழை  வழங்கக் கோரி அவர்கள் தரப்பில் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாசில்தார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.பிந்திரன் ஆஜராகி, கடந்த ஆண்டு வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில், மணமான ஆண் மரணிக்கும்பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமெனு மட்டுமே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். வீரராகவன் ஆஜராகி தங்களது பெற்றோர் மற்றும் சகோதரர் சந்தானத்தின் மனைவி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சந்தானத்திற்கு வாரிசுகள் இல்லை என்றும் தெரிவித்தார். அதனால் நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது வீடு மற்றும் வங்கி கணக்கை கையாள்வாதற்காக இரண்டாம் நிலை வாரிசுகளான தங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி, விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார். அதேசமயம் அரசு பிறப்பித்த அரசாணையில் மணமாகாத ஆண் இறக்கும்பட்சத்தில் வாரிசு சான்று வழங்குவது குறித்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும், மணமாகி மனைவி மற்றும் வாரிகள் இல்லாத ஆணின் வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து தெளிவுபடுத்தாததால், அந்த அரசாணையில் குறைபாடு உள்ளதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, இந்து வாரிசுரிமை சட்டத்திற்கு பொருந்தும்வகையில் அந்த அரசாணை இல்லை என்பதால், அந்த அரசாணையை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை 8 வாரங்களளில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென பெரம்பூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்துள்ளார்.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜிக்கு எதிரான கோவாரண்டோ வழக்கு; தமிழக அரசு வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு!