"பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்துவதில்மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது" உயர்நீதி மன்றம் கருத்து!

"பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்துவதில்மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது" உயர்நீதி மன்றம் கருத்து!

பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்  நடைமுறையை  முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுப்பது தொடர்பான  நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த  வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் சென்னை பல்கலைக்கழகத்திலும், மன்னார்குடி நகராட்சியிலும் மனிதர்களை பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவிப் பொறியாளர், கேண்டீன் உரிமையாளர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார்குடி சம்பவம் தொடர்பான விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நிகழ்வுகளை சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், அனைத்து நகராட்சிகளும், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யத் தேவையான கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கருவிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் குறித்து தகவல் தெரிவிக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com