
கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் துறை மற்றும் மது விலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தமாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.