மதுரை எய்ம்ஸ்; ஒப்பந்தம் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ்; ஒப்பந்தம் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018 -ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 -ம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

அதன் பின்னர் தற்போதுவரை நான்கு ஆண்டுகளைக் கடந்தும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நண்பகல் 12 வரை ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரையில் உள்ள எய்ம்ஸ் செயல் இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அன்று பிற்பகல் ஒப்பந்தப் புள்ளிகள் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனம், 33 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும், முதற்கட்ட பணிகளை 18 மாதங்களில் முடிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:வாரிசு சான்றிதழ் வழங்க 8,000 லஞ்சம்; ஆர்.ஐ. கைது!