வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...அதிகாலை முதலே பெய்து வரும் மழை...முடங்கி கிடக்கும் தொழிலாளிகள்!

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...அதிகாலை முதலே பெய்து வரும் மழை...முடங்கி கிடக்கும் தொழிலாளிகள்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக மழை:

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் , கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த மிதமான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகாலை வேளையில் மழை பெய்ததால் கூலி தொழிலாளிகள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: கொள்கையிலிருந்து மாறிய டிடிவி...அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில்...பாலசுந்தரம் பரபர!

முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி  சென்ற வாகனங்கள்:

அதேபோல் திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நல்லவன்பாளையம், தென்மாத்தூர், ஏந்தல்  உள்ளிட்ட  10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிதமான மழை பெய்தது.  இந்நிலையில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றன.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்:

இதேபோன்று, திண்டுக்கல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சீலப்பாடி, நாகல்நகர், வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.