ஊட்டியில் துணைவேந்தர்கள் கருத்தரங்கம்... ஆளுநர் தொடங்கி வைத்தார்!

ஊட்டியில் துணைவேந்தர்கள் கருத்தரங்கம்... ஆளுநர் தொடங்கி வைத்தார்!
Published on
Updated on
1 min read

உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக உதகையில் 2 நாட்கள் நடைபெறும் துணை வேந்தர்கள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

'உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளும் இன்று மற்றும் நாளை 2 நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. கருத்தரங்கை, தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி இன்று  துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் பல்கலைக் கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் தமிழில் கற்பித்தல் - கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. 

இந்த கருத்தரங்கில், பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணை வேந்தர்களிடம் உரையாற்றுகிறார். மேலும், பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றி துணை வேந்தர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

இதில் லக்னோ, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் பங்கேற்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com