"சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது" -திருமாவளவன்

"சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது" -திருமாவளவன்

சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை- தங்கை சந்திராதேவி மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு பாபு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன்  ஆகியோருடன் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,  ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை சகமானவன் தாக்கி விட்டான் என்று இதை எளிதாக கடந்து போய்விட முடியாது, இதன் பின்னணியில் உள்ள சாதிய வன்மத்தை கொடூரத்தை அரசுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த தாக்குதலை நடத்தியவர்களும் மாணவர்கள்தான் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்ற ஒரு தயக்கம் இருக்கிறது.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது. அவர்களும் நல்ல  கல்வியை பெற வேண்டும் நல்ல ஒழுக்கத்தையும் வாழ்வையும் பெற வேண்டும் என்று நம் மனதில் தோன்றுகிறது. ஆனால் இது ஏன் நிகழ்கிறது என்பதை நாம் உணர வேண்டும் எனக் கூறினார்.

முன்னர் விசிக DPI  இயக்கமாக  இருந்தபோது Dalit Student Panthers (DSP) எனும் அமைப்பை உருவாக்கினோம். ஆனால் இந்த அமைப்பு  செயல்பட்டால் அது மாணவர்களிடையே சாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்தும் என்று உணர்ந்து அப்பொழுதே அந்த மாணவர் அமைப்பை கலைத்து விட்டேன். மாணவர்களிடையே நிலவும் இந்த சாதி வெறுப்பு மனோபாவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் திட்டமிட்டு பரப்ப படுகிறது. சாதியவாத சங்பரிவார் அமைப்புகள் தங்களின் ஆதாயத்திற்காக மக்களை சாதி வெறியை தூண்டி பிளவுபடுத்துகிறார்கள். அதன் விளைவாகத்தான் இன்று சின்னதுரையும் சந்திரா தேவியும் சாதி வன்மத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது எனக் குறிப்பிட்ட அவர்,  அந்த மாணவர்களை கண்டியுங்கள் என்பது அல்ல சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்படிப்பட்ட சாதிய அடக்குமுறைகள் நிகழாமல் இருக்க என்ன செய்யப் போகிறீர்கள் என அரசிற்கு கேள்வி எழுப்பினார். மேலும், சாதிய அடக்குமுறைகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:புனித ஜார்ஜ் கோட்டையும்...காதலும்!!