பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்துக்கு வைகோ கண்டனம்!

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்துக்கு வைகோ கண்டனம்!
Published on
Updated on
1 min read

பொதுசிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று, மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது “ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும்? அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது” என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசினார். மேலும், உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மணிப்பூர் பற்றி எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல், பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை என்றும் தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்றும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு பொது சிவில் சட்டம் அச்சுறுத்தல் ஆகிவிடும் என சட்ட ஆணையம் எச்சரித்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com