"கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்குக"

"கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்குக"
Published on
Updated on
1 min read

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம் கடந்த 2020ம் ஆண்டு அரசாணை 276ன் படி அறிவிக்கப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதன்மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கால்வாயை சீரமைக்க 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்நிலையில் ஆயக்கட்டில் இல்லாத சிலரால் வேலைகள் முடக்கப்பட்டது. இதனால் 4 முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்தனர். 

அதைத்தொடர்ந்து, சீரமைப்பு பணிகளைத் தொடர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பாசன சபைகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு பணிகளை மே 1ம் தேதி தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பணிகளை வரும் மே 1ம் தேதி தொடங்க வேண்டும் எனக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள், ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், சீரமைப்பு பணிகளை தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக கீழ்பவானி வடிநில கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  காத்திருப்பு போராட்டம் மற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com