10 ஆண்டுகள் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 544 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

10 ஆண்டுகள் காவல்துறையில்   சிறப்பாக பணிபுரிந்த 544 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

10 ஆண்டுகள் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பதக்கம் பெறும் காவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தில் கூடுதலாக 400ரூபாய் வழங்கப்படும். 

காவல் பதக்கங்கள்

அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 192 காவலர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 167 காவலர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 91 காவலர்கள், நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம். பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 79 காவலர்கள் மற்றும் இதர பிரிவுகளான இரயில்வே, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் செயலாக்கம் ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 216 காவலர்கள் என மொத்தம் 843 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 544 காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கங்களை இன்று எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசிய போது,    

10 ஆண்டுகள் சிறப்பாக காவல் பணி செய்த காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கங்கள் வாங்கிய அனைத்து காவலர்களுக்கும் எனது பாராட்டுகள். 

பொதுவாக அரசு துறைகளில் பல பேர் தவறு செய்து தண்டனை பெறுவதுண்டு, அதிலும் காவல்துறையில் தவறு செய்தால் உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும், அப்படி இருந்தும் 10 ஆண்டுகள் எந்த வித தண்டனையும் பெறாமல் பணியாற்றியமைக்கு நன்றி என அவர் கூறினார். மேலும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் அவர் கூறினார். 

மேலும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக  மகிழ்ச்சி, ஆனந்தம் போன்ற பல நிகழ்ச்சிகளை சென்னை காவல்துறை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com