சென்னை: இணையதளம் இயங்காததால் தாமதமான விமான சேவை!

Published on
Updated on
1 min read

சென்னை உள்நாடு மற்றும்  பன்னாட்டு விமான நிலையங்களில், இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணி வரை, (சிஸ்டம் டவுனாக) இணையதளம்  இயங்காததால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் 20  விமானங்கள் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு, போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுண்டர்களில், கம்ப்யூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். அந்த கம்ப்யூட்டர்கள் இயங்குவதற்கான இணையதளங்கள், இன்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இயங்கவில்லை. இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், கம்ப்யூட்டர் மூலமாக வழங்க முடியவில்லை. இதை அடுத்து அந்தந்த விமான நிறுவன கவுண்டர்களில் உள்ள ஊழியர்கள், போர்டிங் பாஸ்களை,  கைகளால் எழுதி கொடுத்தனர்.

இதனால் ஒவ்வொரு கவுண்டர்களிலும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியது நிலை ஏற்பட்டது. இதை அடுத்து விமானங்களில் பயணிகள் ஏறுவதும் தாமதம் ஆகியது. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் இன்று அதிகாலை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை பன்னாட்டுவிமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி,  லண்டன் உள்ளிட்ட 8 விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 விமானங்களும், மொத்தம் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளானார்கள். ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தன.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இணையதள இணைப்பில் திடீரென ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சர்வர்கள் சரிவர இயங்கவில்லை. இதை அடுத்து ஒவ்வொரு கவுண்டர்களிலும், கூடுதலாக ஊழியர்களை நியமித்து, போர்டிங்  பாஸ்களை, மேன்வல் மூலம் கைகளால் எழுதி கொடுக்க செய்தோம். இதனால் பயணிகள், விமானங்களில் ஏறுவது தாமதம் ஆகியதால், விமானங்கள் புறப்படுவதிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல், இணையதள இணைப்பு சீராகிவிட்டது. எனவே விமான சேவைகளும் தற்போது வழக்கம் போல் நடக்கின்றன என்று கூறுகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com