உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நினைவு பாிசு வழங்க கூடாது!

உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நினைவு பாிசு வழங்க கூடாது!

உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டுமென கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், இயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதியில் சாலைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும், அலுவல் ரீதியாக வரும் நீதிபதிகளை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள்  மட்டும் வரவேற்று, எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் வருகை புரிந்தால், மரபுமுறைப்படி, அவர்கள் தங்குமிடத்திலோ, ரயில் நிலையங்களிலோ, விமான நிலையங்களிலோ வரவேற்கலாம் எனவும், நீதிமன்ற நேரத்தில் வந்தால், அதற்கு பொறுப்பான ஊழியர் மூலமாக வரவேற்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது எனவும், எந்த காரணத்தை கொண்டும் நீதிமன்ற நேரத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் வரும் நீதிபதிகளுக்கு எந்த அணிவகுப்பு மரியாதையும் வழங்கக் கூடாது எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில், கருப்பு நிற கோட், கருப்பு நிற டை அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com