பள்ளி மாணவர்கள் மீது சரிந்து விழுந்த ஷாமியான பந்தல்!

பள்ளி மாணவர்கள் மீது சரிந்து விழுந்த ஷாமியான பந்தல்!
Published on
Updated on
1 min read

திருச்சி: பள்ளி விழாவில், மாணவர்களின் மீது பந்தல் சரிந்து விழுந்து, மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஒரு தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கூடத்தில், நடந்து முடிந்த எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, இன்று காலை பாராட்டு விழா  நடந்தது.

இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டனர். இந்த நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று காற்று வீசியது. இதில் பின்பக்க சாமியான பந்தல் சரிந்து விழுந்தது.இதனால் சாமியானா பந்தலில் அமர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மீது சாமியானா பந்தல் சரிந்து விழுந்தது.

இதனால் சாமியான பந்தலில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். அப்பொழுது எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் மணிகண்டன் என்ற ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பீதி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்தனர். மேலும் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை வாகனங்கள் மூலம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்கள். பின்னர் சாமியான பந்தல் போட்ட ஐந்து தொழிலாளர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே கல்வி அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் இன்று கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com