பேருந்து நிலையத்தில் படுத்திருந்தவர்களிடம் இரு ஐம்பொன் சிலைகள்..! போலீசார் விசாரணை..!

பேருந்து நிலையத்தில் படுத்திருந்தவர்களிடம் இரு ஐம்பொன் சிலைகள்..! போலீசார் விசாரணை..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தினுள் இன்று காலை படுத்து உறங்கிக் கொண்டிருந்த இருவரை கோயம்பேடு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பி விசாரித்தபோது படுத்திருந்த இருவரில், ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதனுள் ¾ அடி உயரமுள்ள பொன்மணி விளக்கு ஏந்திய சிலை மற்றும் 3 அங்குலம் கொண்ட சிறிய பெருமாள் சிலை ஆகிய இரு ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த கோயம்பேடு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது பிடிபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் (32) என்பதும் தப்பியோடிய நபர் கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ் (30) என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்களிடம் திருச்சி லால்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிலைகளை கொடுத்ததுடன் பழைய இரண்டு ரூபாய் நோட்டு மற்றும் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து அதனை சென்னையில் உள்ள ஒரு நபரிடம் காட்டினால் சிலைகளை பெற்றுக்கொண்டு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பார்கள் என கூறி பணத்தை பெற்றுவரச் சொல்லி அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. 

பின்னர், சிலைகளை பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார் பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த பெண்மணி குறித்தும், சென்னையில் சிலைகளை வாங்கவிருந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடிய நபரையும் தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பின் பிடிபட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளையும் கோயம்பேடு போலீசார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com