மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
புதிய ஆய்வக கட்டிடம் திறப்பு:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்த தமிழக சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினார்.
அந்நிய மரங்களை அகற்றுவதற்கான பணிகள்:
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். ஏனென்றால், அந்நிய மரங்களால் நமது பாரம்பரிய மூலிகைச் செடிகள் அழியக்கூடிய சூழ்நிலை உள்ளது. அந்நிய மரங்களால் ஒரு பயனும் இல்லை என்று ம் தெரிவித்தார். அதனால் அதை தடுப்பதற்கும் வெளிநாட்டு செடிகள் தமிழகத்தில் வளர்ப்பதற்கும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தின் கருத்தை ஏற்று விரைவில் அதற்கான சட்ட திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்துவார் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
உலக வெப்பமயமாதல்:
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய சூழ்நிலையில் உலக வெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதைத் தவிர்க்கும் பொருட்டு நம் அனைவருக்கும் சுற்றுச் சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி, விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டார்.