முடிவுக்கு வருமா ? மீண்டும் மீண்டும் சேதம் ஆகும் வந்தே பாரத் ரயில் காரணம் என்ன?

முடிவுக்கு வருமா ? மீண்டும் மீண்டும் சேதம் ஆகும் வந்தே பாரத் ரயில் காரணம் என்ன?
Published on
Updated on
2 min read

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதே அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது மட்டும் அல்லாமல் 4 எருமை மாடுகளும் உயிரிழந்தன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் அதே வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பசுமாடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

இதையடுத்து பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி சென்னை- மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த சேவையை தொடங்கிவைத்து சுமார் ஒருவாரம் கழித்து வந்தே பாரத் ரயில், மைசூரூவில் இருந்து அரக்கோணம் அருகே வந்த போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது மோதியது. தனைத் தொடர்ந்து கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கூட, மும்பை - ஷீரடி ரயில் தானே ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதன் கதவுகள் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் திறக்காமல் இருந்துள்ளது. வந்தே பாரத் ரயிலின் கதவுகள் முழுக்க முழுக்க தானியங்கி செயல்பாடு கொண்டதாக விளங்கும் நிலையில், கதவுகள் திறக்க முடியாததால் பயணிகள் பெரும் பீதியில் இருந்தனர். பின்னர் ரயில்வே அதிகாரிகள் உதவியோடு பயணிகள் கார்ட் கேபின் வழியாக இறக்கிவிடப்பட்டனர். இந்த இரயில் தொடங்கப்பட்ட 4 நாட்களிலேயே இதுபோல் சிக்கலில் சிக்கியது.


இந்த நிலையில் மீண்டும் மாடு மோதி வந்தே பாரத் இரயில் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. டெல்லி நிஜாமுதீன் - மத்திய பிரதேச ராணி கமலாபதி வந்தே பாரத் இரயில் சேவையை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மோடி தொடங்கி வைத்தார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் இரயிலாகும். இந்த இரயில் போபாலில் இருந்து புறப்பட்டு குவாலியரின் தாத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மாடு ஒன்று இரயில் முன்பகுதியில் திடீரென மோதியது.

வழக்கம்போல் இதிலும் இரயிலின் முன்பகுதி சேதமடைந்து பிளாட்பாரத்திலேயே சுமார் 15 நிமிடங்கள் நின்றது. பின்னர் மாடுகளை அங்கிருந்து கடினப்பட்டு அகற்றிய நிர்வாகிகள், பின்னர் இரயிலை அங்கிருந்து இயக்கினர். இதனால் பயணிகள் சில மணி நேரங்கள் சிரமத்துக்கு உள்ளானர். இது போன்று தொடர்ந்து மாடுகள் முட்டுவதால் இரயில்கள் சேதமடைந்து வருவது தொடர் வாடிக்கையாக அமைந்திருக்கிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com