அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு...! தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி...!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு...!  தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி...!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நாட்டில் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு துறை அலுவலங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

 இதையும் படிக்க:.. ஒரு கோடி அப்பு...! நீ பாத்த..? திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.... அயல்நாட்டு பணம்...!

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் சமத்துவ நாள் உறுதி மொழியை வாசிக்க அவரை பின்தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக...
மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதிமொழி எடுத்து கூறியதாவது :- "ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவருடைய பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் எதுவும் இன்றி சமத்துவ சமுதாயத்தை அமைக்க நம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,  சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களும் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன்". 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசித்ததை தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளும் உறுதி மொழியை பின் தொடர்ந்து வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதையும் படிக்க:... இட ஒதுக்கீடு : எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது - அமைச்சர் ராஜ கண்ணப்பன்!