யார் இந்த தாராவி மாடல் சிறுமி ?

யார் இந்த தாராவி மாடல் சிறுமி ?

குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் 'கார்வா' என்ற சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த 12 வயது மலீஷா என்ற சிறுமியின் குடும்பம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அங்கே தாராவி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபர்ட் ஹாப்மேன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு இசை ஆல்பத்துக்காக இந்தியா வந்திருந்தார்.அப்போது மும்பையில் இருந்த அவர், கொரோனோ தொற்று காரணமாக மும்பையிலே தங்க வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு சிறுமி மலீஷாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரிடம் அந்த சிறுமி நன்றாக பேசவே, அவருடன் பழகியுள்ளார். மேலும் சிறுமியின் வறுமையிலும், அவரது திறமை ராபர்ட்டை வெகுவாக கவர்ந்துள்ளது.


எனவே சிறுமிக்கு எதாவது செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சிறுமிக்கு டொனேஷன் பெற்றுக்கொடுக்க எண்ணி, அதற்காக அவருக்கு என்று பிரத்யேகமாக இன்ஸ்டா பக்கம் ஒன்றை ஓபன் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அதில் அவரது புகைப்படங்கள் உள்ளிட்டவையை பதிவேற்றம் செய்து Followers-களை பெற்றுக்கொடுத்தார்.அதில் இருந்து சிறுமிக்கு நிதி வர தொடங்கியது. சுமார் 15 லட்சம் வரை நிதி பெற எண்ணிய ராபர்ட், அதற்காக சிறுமிக்கு பலவற்றை செய்துகொடுத்துள்ளார். இப்படியே சிறுமி பிரபலமாக தொடங்கினார். அவரது ஒவ்வொரு போஸ்டுக்கும் கீழே #theprincessfromtheslum('குடிசை இளவரசி) என்று இருக்கும். இப்படியே இந்தியா முதல் வெளிநாடு வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், பிரபல மாடலாக மாறினார்.


தி பீக்காக், காஸ்மோபாலிட்டன் இந்தியா உள்ளிட்ட முக்கிய முன்னணி இதழ்களில் மலீஷாவின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதிலும் சில நேரங்களில் முதல் பக்க அட்டையில் அவரது புகைப்படங்கள் இடம்பெற்றன. இப்படியே அவருக்கு ஒரு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்கவும் செய்தார்.இவரது பிரபலத்தின் காரணமாக தற்போது 2 பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து மாடலிங் துறையில் இருக்கும் இவர், சில நேரங்களில் பத்திரிகைகளுக்கு பேட்டிகளும் அளித்து வருகிறார். அதோடு இவர் ஆடைகள் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் செய்து கொடுக்கிறார். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட followers-களை வைத்திருக்கும் இவர், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான 'Forest Essentials' நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் தற்போது அவர் சூப்பர் மாடலாக உருவெடுத்துள்ளார். இந்த நிறுவனம் இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளதோடு, உலகளவில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. இந்த சூழலில் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஷோ ரூமுக்கு மலீஷா செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com