

1947, ஜூன் 4ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டன், ஆல் இந்தியா ரேடியோவில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார். 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியர்களிடம் ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷார் ஒப்படைத்துவிடுவார்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.
அந்த சுதந்திர தினத்தைப் பகுத்தறிவாளர் தந்தை பெரியார் மட்டுமல்ல, அவருக்கு முற்றிலும் முரணான ஜோதிடர்களும் எதிர்த்தனர்.
தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் காத்திருந்த அந்தத் தேதியைக் கேட்டு, கல்கத்தாவைச் சேர்ந்த ஜோதிடர் சுவாமி மதானந்த், "என்ன காரியம் செய்திருக்கிறார்கள்! என்ன காரியம்.." எனக் கதறினார். ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை அது வெறும் நாள்காட்டியில் காட்டப்படும் தேதி அல்ல; நட்சத்திரங்களில் எழுதப்பட்டிருக்கும் அபசகுனம் நிறைந்த நாள்.
அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமையாக இருந்தது. கல்கத்தா முதல் பனாரஸ், குமரி வரை உள்ள ஜோதிடர்களால் ஜாதகங்கள் வரையப்பட்டு, கிரக நிலைகள் ஆராயப்பட்டு, இந்தியா பிறக்கவிருந்த அந்தத் தருணமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆய்வின் முடிவு நம்பிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் எல்லா ஜாதக முறைப்படியும் அந்த நாள் 'அசுபமானது' என்ற முடிவுக்கு ஜோதிடர்கள் வந்தனர்.
அரசியல்வாதிகள் தேர்ந்தெடுத்த தேதியை மாற்ற முடியாது. நேரத்தை மாற்றலாம் என்ற முயற்சிகளில் ஜோதிடர்கள் இறங்கினர்.
20ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா முதல் ஜோர்தான் வரை பல நாடுகள் இங்கிலாந்திடம் இருந்து விடுதலைப் பெற்றன. 1947 கோடைக்காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியேறுவது என்ற முடிவை லண்டன் எடுத்திருந்தது.
ஆனால் அரசியல் நிலைத்தன்மை இல்லாத சூழலில் புதிய பிரச்சனைகள் வெடிப்பதற்கு முன்னர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது.
பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லாபியரும், அமெரிக்க பத்திரிகையாளர் லாரி காலின்ஸும் இணைந்தெழுதிய 'ஃப்ரீடம் அட் மிட்நைட்' நூலில், அந்த இறுதி மாதங்களின் சூழலை பதிவு செய்திருக்கின்றனர்.
குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம் ஜோதிடத்துக்கோ வேறு எந்த மூட நம்பிக்கைகக்கோ ஆதாரவளிப்பது அல்ல. 80வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு சுதந்திரம் அடைந்த பொது நடந்த விவாதங்களை நினைவுகூறுவது மட்டுமே.
பல தசாப்த கால தேசியவாத போராட்டங்களுக்குப் பிறகு, "வரலாற்றின் சக்திகளாலும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாலும் விரட்டியடிக்கப்படுவதற்குப் பதிலாக, சரியான நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுவதே பிரிட்டனுக்கு நல்லது" என்ற முடிவை பிரிட்டன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர்கள் எழுதியிருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்துக்கான பொறுப்பு மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா இன்னும் சிதைந்துகொண்டிருந்த நாடாகத்தான் இருந்தது.
"1947, ஜூன் 3ஆம் தேதி, மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, பால்தேவ் சிங் ஆகியோர் ஆல் இந்தியா ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசினர். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு தனி நாடுகளாகப் பிரிக்கப்படும் என்றும், முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 1948 ஜூன் காலக்கெடுவை விட பல மாதங்கள் முன்னதாகவே ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவித்தது" என்று லாபியரும் காலின்ஸும் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த நாள் காலையில், அவர் திடீரென ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட்டி, "1948 ஜூன் வரை பிரிட்டிஷார் காத்திருக்கப் போவதில்லை" எனக் கூறினார். தொடர்ந்து ஒரு உறுதியான தேதியாக - 1947, ஆகஸ்ட் 15-ஐ அறிவித்தார்.
இந்த தேதி ஜோதிடர்களை உலுக்கியது. இந்தியா கலாச்சாரத்தில் அறிவு ஜீவிகளாக பார்க்கப்பட்ட ஜோதிடர்களிடம் கலந்தாலோசிக்காமலே மவுண்ட்பேட்டன் தேதியை அறிவித்தது குற்றமாக கருதப்பட்டது. இனி என்ன செய்வது? கையில் இருந்தது வெறும் 10 வாரங்கள் மட்டுமே.
"பனாரஸிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும், அவர்களது எதிர்வினை மிகவும் கடுமையாக இருந்தது. அந்த தேதி மிகவும் அசுபமானது என்று அவர்கள் கருதியதால், நிரந்தர சாபத்திற்கு ஆளாகும் அபாயத்தை எடுப்பதை விட, ஒரு நாள் கூட பிரிட்டிஷாரை பொறுத்துக்கொள்வதே இந்தியாவுக்கு நல்லது என்று அவர்கள் நினைத்தனர்" என்று 'ஃப்ரீடம் அட் மிட்நைட்' நூலில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்கத்தாவில் இருந்த சுவாமி மதானந்த் தன் ஜோதிட கணக்குகளை நோக்கி திரும்பினார். சூரியன், சந்திரன், கிரகங்கள், ராசிகள், பூமியின் விதியை நிர்ணயிக்கும் 27 நட்சத்திரங்களின் நிலைகள் தொடர்பான கணக்கீடுகள் ஆகஸ்ட் 15ல் பிறக்கவிருக்கும் நாட்டைக் குறித்து சென்ன சொல்கின்றன என்பதை ஆராய்ந்தார். அவரது கணக்கீடுகள் பேரழிவை முன்னறிவித்தன!
வெள்ளிக்கிழமை ஒன்றைத் தொடங்குவதற்கு சரியான நாள் இல்லை என்பது மட்டும்அல்ல, இந்தியா மகர ராசியில் பிறக்கவிருந்தது; அப்போது சனியும் ராகுவும் தங்கள் செல்வாக்கை செலுத்திக் கொண்டிருந்தன.
மதானந்தைப் பொறுத்தவரை, இது வெறும் கணக்கியல் அல்ல. ஒரு புதிய தேசம் பிறக்கவிருந்தது, அதன் முதல் தருணமே அதன் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று அவர் நம்பினார்.
உடனடியாக மவுண்ட்பேட்டனுக்கு கடிதம் எழுதி, "கடவுள் மேல் ஆணையாக, ஆகஸ்ட் 15அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் தர வேண்டாம்" என்று வேண்டிக்கொண்டார். இது 'ஃப்ரீடம் அட் மிட்நைட்' நூலில் பதிவாகியிருக்கிறது.
"வெள்ளங்களும், வறட்சியும், பஞ்சமும், படுகொலைகளும் நேர்ந்தால், அது நட்சத்திரங்களால் சபிக்கப்பட்ட ஒரு நாளில் சுதந்திர இந்தியா பிறந்ததால்தான்" என்று மதானந்த் எழுதினார்.
ஒரு புறம் மதானந்த் தேதியை மாற்றுமாறு மவுண்ட்பேட்டனிடம் வலியுறுத்தினார். மறுபுறம், வேறு பல ஜோதிடர்கள் ஜவஹர்லால் நேருவையும் இதர இந்து தலைவர்களையும் அணுகி, தேதியை மாற்ற முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இருந்தன.
இந்த தேதியை முடிவு செய்தது குறித்து மவுண்ட்பேட்டன், "என்னிடம் ஒரு தேதியை முடிவு செய்ய சொன்னபோது, பணியை விரைவில் முடிக்கவேண்டும் என நினைத்தேன். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தான் நிச்சயமாக ஒரு தேதி வேண்டும். அதனால் ஆகஸ்ட் 15 என முடிவு எடுத்தேன்.
ஜப்பான் இங்கிலாந்திடம் சரணடைந்த இரண்டாவது வருடத்தைக் குறிக்கும் நாளாக அது இருந்தது.
இந்த தேதியை நான் தேர்தெடுத்தது எதிர்பாராமல் நடந்த ஒன்று தான். இந்த மொத்த நிகழ்வுக்கும் நான் தான் தலைவன் என்பதை நிரூபிக்க நான் முனைப்பாக இருந்தேன்." எனக் கூறியதாக அந்த புத்தகம் தெரிவிக்கிறது.
அவரது பிடிவாதம் தேதியை மாற்ற முடியாது என்பதை வலியுறுத்தியது.
இந்த சூழ்நிலையின் சுவாரஸ்யமான அம்சங்களை, கோட்டமராஜு நாராயண ராவ் (கே.என். ராவ்) என்பவர் தன் 'தி நேரு டைனஸ்டி: அஸ்ட்ரோ-பொலிடிக்கல் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் நேரு, இந்திரா, சஞ்சய் அண்ட் ராஜீவ்' நூலில் ஜோதிட விளக்கங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
அவர், உண்மையான சிக்கல் ஆகஸ்ட் 15 என்பதில் இல்லை. அதில் எந்த நேரத்தில் என்பதில்தான் உள்ளது என்கிறார். அபிஜித் முகூர்த்தம் - அதாவது பகலுக்கும் இரவுக்கும் இடையிலான நடுத்தர தருணத்தில் (மாலை) விடுதலை பெறுவது சிறப்பானதாக அமையும் எனக் கூறியிருக்கிறார்.
நேரு இந்த பிரச்சினையை எப்படி கையாண்டார் என்பதற்கு, பத்திரிகையாளர் துர்கா தாஸின் 'இந்தியா ஃப்ரம் கர்சன் டு நேரு அண்ட் ஆஃப்டர்' நூலை கே.என். ராவ் மேற்கோள் காட்டுகிறார். துர்கா தாஸின் கூற்றுப்படி, நேரு "ஒரு சுவாரஸ்யமான சமரசத்தை கண்டுபிடித்தார்".
"ஆகஸ்ட் 14 மதியம் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி, நள்ளிரவு வரை அதன் கூட்டத்தைத் தொடர வைத்தார் நேரு. மேற்கத்திய முறைப்படி நள்ளிரவில் ஆகஸ்ட் 15 பிறந்தது; அந்த நேரம் இந்து நாள்காட்டி வகுத்திருந்த உகந்த காலப்பகுதிக்குள் அமைந்திருந்தது." என துர்க்கா தாஸ் கூறியிருக்கிறார்.
அதாவது இந்துமுறை நாட்காட்டியின் படி, சூரியன் உதிக்கும்போதுதான் ஒரு நாள் தொடங்குகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஆகஸ்ட் 15ம் நாள் தொடங்கவே இல்லை.
"ஆகஸ்ட் 15 நவீன வரலாற்றின் தொடக்கத்திற்கு முழுக்க முழுக்க அசுபமான நாளாக இருந்தாலும், ஆகஸ்ட் 14, நட்சத்திரங்களின் மிகவும் சாதகமான அமைப்பைக் கொண்டதாக இருந்தது என்று ஜோதிடர்கள் குழு இறுதியாக இந்திய அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கியது" என்று ஆசிரியர்கள் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்' நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
"வான் சக்திகளை சமாதானப்படுத்த இந்திய அரசியல்வாதிகள் முன்வைத்த சமரசத்தை வைஸ்ராய் [மவுண்ட்பேட்டன்] ஏற்றுக்கொண்டார். 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர டொமினியன்களாக மாறும் என்பதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்" என்று ஆசிரியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நேரு ஒரு பகுத்தறிவாளராக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தில் ஜோதிடத்தின் இடத்தை உணர்ந்து இந்த முடிவை எடுத்தார். இந்தியா, புதிய நாட்டை உருவாக்குவதற்கு உகந்த பூசம் நட்சத்திரத்தில் கடக ராசியில் பிறந்தது.
அப்போது ஜவஹர்லால் நேரு, நாட்டின் பிறப்பை சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் அந்த வார்த்தைகளை உரைத்தார்: "உலகம் உறங்கும் நள்ளிரவின் அந்த தருணத்தில், இந்தியா வாழ்வுக்கும் சுதந்திரத்திற்கும் விழித்தெழும்." இப்படியாக, அனைவரது ஒப்புதலோடு, "நள்ளிரவின் அந்த தருணத்தில்" சுதந்திர இந்தியா பிறந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்