

விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது, அமெரிக்காவில் நடந்த உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் விமானத்தின் சோதனை ஓட்டம்.
இது விமான நிலையத்தில் காபி குடிக்கும் செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள முடியுமா என அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹார்ட் ஏரோஸ்பேஸ்’ (Heart Aerospace) என்ற விமானத் தயாரிப்பு நிறுவனம், ‘எக்ஸ்1’ (X1) என்ற தனது முழு அளவிலான மின்சார விமானத்தை முதன்முறையாக வெற்றிகரமாக பறக்கவிட்டுச் சாதனை படைத்துள்ளது.
நியூயார்க் மாநிலத்தின் ஒரு பிராந்திய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 1,100 அடி உயரத்தை எட்டி, 27 நிமிடங்கள் வான்வெளியில் வலம் வந்தது.
இந்த ஒட்டுமொத்தப் பயணமும் பேட்டரி மின்சாரத்திலேயே சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக ஆன செலவு சுமார் 5 டாலர் தான். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 500 ரூபாய்! ஒரே ஒரு பைலட் மட்டுமே இயக்கிய இந்தச் சோதனை ஓட்டத்தில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை.
'எக்ஸ்1' (X1) விமானம் சிறிய வணிக ரீதியிலான விமானத்தின் அளவில் இருக்கும் ஒன்று.
ஒரு சிறகின் முனையிலிருந்து மறு சிறகின் முனை வரையிலான அகலம் மட்டுமே 106 அடிகள். மூக்கிலிருந்து வால் பகுதி வரையிலான நீளம் 76 அடிகள். இதன் எடை 25,000 பவுண்டுகளுக்கும் அதிகம் (சுமார் 11,300 கிலோ)!
27 நிமிடங்கள் பறக்க 500 ரூபாய் தான் செலவு என்றால், எலெக்ட்ரிக் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது டிக்கெட் கட்டணம் குறையுமா?
இந்த 5 டாலர் என்பது 27 நிமிடப் பயணத்தின் போது பேட்டரி உறிஞ்சிய மின்சாரத்திற்கான கட்டணம் மட்டுமே. ஒரு விமானத்தை இயக்குவதில் பைலட் மற்றும் ஊழியர்களின் சம்பளம், விமானப் பராமரிப்புத் தொகை, விமான நிலையக் கட்டணங்கள், காப்பீடு, விமானக் கடன் வட்டி மற்றும் பேட்டரிகளை அவ்வப்போது மாற்றும் செலவு எனப் பல நூறு கணக்குகள் இருக்கின்றன.
இன்றோ நாளையோ விமான கட்டணம் குறையும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் வணிக விமானங்கள் எலெக்ட்ரிக் மயமாகும் போது குறைந்த செலவில் பயணிப்பது சாத்தியமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
தற்போது பறக்கவிடப்பட்டுள்ள எக்ஸ்1 என்பது ஒரு தொழில்நுட்பச் சோதனை மாதிரி மட்டுமே. இதைக் கொண்டு பெறப்படும் தரவுகளை வைத்து, 'இஎஸ்-30' (ES-30) என்ற 30 இருக்கைகள் கொண்ட ஹைப்ரிட்-எலக்ட்ரிக் (மின்சாரம் + வழக்கமான எரிபொருள்) விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஹார்ட் நிறுவனம். இந்த விமானத்தை 2031-க்குள் பயன்பாட்டிற்குக்கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரையில் எரிபொருள் செலவு குறைவு என்பதுடன் எஞ்சின் பராமரிப்பு செலவும் குறைவானது. இதனால் தற்போதைய வணிக விமானங்களுடன் ஒப்பிடுகையில் இஎஸ்-30' (ES-30) விமானத்தின் பயண செலவு 40% குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் புரிந்து கொண்டுதான் யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் கனடா போன்ற சர்வதேச முன்னணி விமான நிறுவனங்கள் இப்போதே இந்த விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
முதலில் குறைந்த மின்சாரத்தையும், குறைந்த பராமரிப்பையும் கோரும் சிறிய ரக விமானங்கள் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்