

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், பட்டொளி வீசி பறக்கும் நமது மூவர்ண கொடி உருவானது எப்படி, அதன் பொருள், தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.
தேசிய கொடியின் வரலாறு:
மகாத்மா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி ஆங்கிலேயே ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. அப்போது தான் சுதந்திர இந்தியாவிற்கு தனியொரு அடையாளம் தர, ஒரு கொடி தேவை என நினைத்தனர். அதற்கு முன்னதாக சுதந்திர போராட்டத்தை பிரதிபலிக்கும் சின்னமாக தேசியக்கொடி ராட்டை சின்னத்துடன் உருவாக்கப்பட்டது.
1921-ம் ஆண்டில் “பிங்கலி வெங்கய்யா” (Pingali Venkayya) என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர், மகாத்மா காந்திக்கு ஒரு கொடி வடிவமைப்பை வழங்கினார். அதில் இந்துக்களுக்கு சிவப்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு பச்சை ஆகிய இரண்டு முக்கிய மதங்களுடன் தொடர்புடைய நிறங்கள் இருந்தன. இரண்டாக பிரிக்கப்பட்ட கொடியின் மையத்தில், மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தை எடுத்துரைக்கும் விதமாக நூல் நூற்கும் ராட்டை இடம் பெற்றிருந்தது.
அந்த தேசியக்கொடியில், கிறிஸ்துவர்கள், யூதர்கள், பார்சிகள் ஆகியோரை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிறத்தை சேர்க்கும் படி, மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் கொடி மாற்றி வடிவமைக்கப்பட்டது. பின்னர் 1923 -ம் ஆண்டு மே மாதத்தில் நாக்பூரில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முதன் முறையாக கொடி பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொடியில் சில மாற்றங்களை ஏற்படுத்த, 1931 ஆம் ஆண்டு, காங்கிரஸின் கொடிக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஐதாராபாத்தைச் சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணி தான், இதற்கு முன்னதாக தேசியக் கொடியில் இருந்த அடர் சிவப்பு நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தையும், ராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரத்தை சேர்த்து தற்போதைய கொடியை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், ராட்டைக்கு பதிலாக 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரத்துடன் கூடிய புதிய தேசிய கொடி, 1947-ம் ஆண்டு ஜூலை 22 -ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தேசிய கொடி தயாரிப்பு:
தேசியக் கொடியை தயாரிக்கும் உரிமை, கர்நாடகாவின் தட்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி கிராமத்தில், கர்நாடகா காதி கிராமோதகா சம்யுக்த சங்கம் என்ற அமைப்புக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஹூப்ளியை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில், ஜவுளி வேதியியலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி கல்லூரியும் அமைந்துள்ளது.
பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) அமைப்பின் படி, சரியான அளவில், சரியான வடிவில் தேசியக்கொடியை இவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். தேசியக்கொடி 9 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. 6×4 இன்ச்களில் சிறியதாகவும், 21X14 அடியில் பெரியதாகவும் செய்யப்பட்டு வந்தது. தேசியக்கொடி தயாரிக்க பயன்படும் ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றலாமா...?
நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற தேசிய நாட்களில் மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த விதிமுறை, சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, 2002-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று, இதற்கான புதிய விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
அதன்படி இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்திய தேசியக் கொடியை எந்த நாளிலும் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, தேசியக் கொடியை கல்வி நிறுவனங்கள் அதாவது, பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம்களில் கொடியின் மரியாதையை ஊக்குவிக்கும் வகையில் தேசியக் கொடியை ஏற்றலாம். பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது உறுதிமொழியும் ஏற்கப்பட வேண்டும்.
ஒரு பொது, ஒரு தனியார் அமைப்பு அல்லது ஒரு கல்வி நிறுவனம் தேசியக் கொடியை அனைத்து நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம் அல்லது காட்சிப்படுத்தலாம் என்றும் அதே நேரம் கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு எந்த இழுக்கும் ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய விதிமுறையின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக் கொடியை பறக்க விடும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கொடியை அவமதிக்கும் செயல்கள்:
இப்படி அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற நிலையில், அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அதனை அவமதிக்கும் செயல்கள் என்னென்ன என்பதையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றுவது அல்லது காட்சிப்படுத்துவது கூடாது. கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை ஏற்றவோ, காட்சிப்படுத்தப்படுத்தவோ கூடாது. எந்தவொரு நபருக்கும், பொருளுக்கும் தாழ்வானதாக தேசியக்கொடி பறக்க கூடாது.
தேசியக் கொடிக்கும் உயரமாக அல்லது மேலே அல்லது அதற்கு இணையாக வேறு எந்த கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாளச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்படுத்திய பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது. மேசை மீது விரிப்பாகவோ, மேடை மீதோ தேசியக் கொடியை விரிக்க கூடாது.
தேசியக் கொடியை ஆடையின் ஒரு பகுதியாகவோ, அல்லது சீருடையாகவோ, அல்லது இடுப்புக்கு கீழே அணியும் துணியாக பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி வடிவத்தை மற்ற ஆடைகளில் அச்சிடவோட, பின்னலிடவோ கூடாது. தேசியக் கொடியின் மீது எழுத்துக்கள் எதையும் பதிவு செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
தேசியக் கொடியின் துணி மற்றும் அளவுகளில் மாற்றம் :
இந்தியாவின் தேசிய கொடி குறித்த சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்ட பின்னர். 2021 டிசம்பர் 30-ம் தேதியில் வெளியிடப்பட்ட உத்தரவில், பாலியஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின்படி, தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம், அகலத்தின் விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டது.
தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விடும் முறை:
இந்திய அரசின் உத்தரவு இல்லாமல் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடக்கூடாது. அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய போது முதலில் கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரை கம்பம் வரையில், கொடி இறக்கப்பட வேண்டும். அதேபோன்று தேசியக் கொடியை இறக்கும்போதும், உச்சிவரை ஏற்றப்பட்டு பின்பு முழுவதும் இறக்கப்பட வேண்டும்.
தேசியக்கொடியை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?
இந்திய தேசியக் கொடி குறித்த சட்டத்தின்படி, தேசியக்கொடியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அதை எரித்தோ, அல்லது வேறு வழியிலோ தனிமையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். காகித கொடி பொதுமக்களால் அசைக்கப்பட்ட பிறகு அவற்றை தரையில் போடக்கூடாது. தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் தனிமையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடியை ஏற்றும் நாம், அந்த நாள் முடிந்தவுடன் அதன் மாண்பு மாறாமல் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்...
சுதந்திர இந்தியாவை போற்றுவோம்...
தேசியக் கொடியை பாதுகாப்போம்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்