“முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் விஜய்” - ஊழல் ஒழிப்பு முதல் மாநில உரிமைகள் வரை… அதிரடியான அறிவிப்புகள்!

தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதும் ஒரு வகையான விடுதலைதான்
cm vijay
Published on
Updated on
2 min read

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த விழாவில் முதல்வர் விஜயின் குடும்பத்தினர் மற்றும் நடிகை திரிஷா கலந்துகொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய அவர், தமிழக மக்களுக்கும், முப்படை வீரர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். “உயிரையும் உடமைகளையும் இழந்து நமக்காக சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கங்கள்” என்று கூறிய முதல்வர் விஜய், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் குறித்து பேசினார். “நம்மை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் உணரும்போது, தானாகவே ஒற்றுமை உருவாகும். அந்த ஒற்றுமையின் முன் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகள் உடைந்து நொறுங்கும். அங்குதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது” என்றார்.

மகாத்மா காந்தி பெற்றுத் தந்த சுதந்திரத்தை இந்தியா வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலிலிருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான பணியாகும் என்றார். “தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதும் ஒரு வகையான விடுதலைதான். அதற்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தவெக அரசு உண்மையான, நேர்மையான, வெளிப்படையான அரசாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுடன் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை தொடருவோம் என்றாலும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான எந்த முடிவையும் ஏற்க முடியாது என முதல்வர் விஜய் வலியுறுத்தினார். “மாநில உரிமைகளை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தவெக அரசு எதிர்க்கும்” என்றார். மேலும், முந்தைய ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள் தொடரும் என்றும் அவர் அறிவித்தார். “அம்மா உணவகம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார்.

தவெக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், “விவசாயிகளுக்கான ரூ.5,932.23 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார். அதேவேளை, தேர்தல் வெற்றியுடன் மக்களின் கடமை முடிவதில்லை என்றும், ஆட்சிக்கு எதிரான சதிகளை முறியடிக்க மக்கள் தொடர்ந்து அரசுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, 2026ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர்” விருது காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. மாநில இளைஞர் விருதுகள் இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார் மற்றும் நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலிக்கு “நல் ஆளுமை விருது” வழங்கப்பட்டது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் அவரது குழுவினரும், கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த்தும் முதலமைச்சரின் கைகளில் இருந்து விருதுகளைப் பெற்றனர்.

முதல்முறையாக முதலமைச்சராக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய விஜய், ஊழல் ஒழிப்பு, மாநில உரிமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி தனது அரசின் எதிர்கால நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com