மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைய நகர நாகரீகத்தை ஒத்த ஆரம்பகட்ட ஆதாரங்கள், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள், இந்தப் பகுதியும் சங்ககால நகர நாகரீகத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மார்ச் மாதம், கீழடி (11-ஆம் கட்ட அகழாய்வு) உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அவற்றில் ஒன்றாக கரிவலம்வந்தநல்லூர் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதி, கீழடியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரிவலம்வந்தநல்லூரின் மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள காரிச்சாத்தான் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கிணறு போன்ற கட்டட அமைப்பு, கண்ணாடி மணிகள், இரும்புத் தாதுக்கள், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. பானை ஓடுகள் மற்றும் ஈமத்தாழிகளில் பொறிப்புகளும் காணப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறையினரின் தகவலின்படி, செங்கல் கட்டுமானம் மற்றும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவை 'ரிலேடிவ் டேட்டிங்' (Relative Dating) முறையில் கீழடி, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம் மற்றும் அரிக்கமேடு அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களுடன் ஒத்துப்போகின்றன. இதனால், இவை கி.மு. 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1930-களிலேயே கண்டெடுக்கப்பட்ட ரோமானிய தங்க நாணயங்கள்
கரிவலம்வந்தநல்லூரில் 1930-களில் ஆறு ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் மாதிரிகள் தற்போது திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் வரலாற்றாசிரியருமான ஆர். நாகசாமி தொகுத்த *South Indian Studies* நூலில், கரிவலம்வந்தநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புதையல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புதையலில்,
3.5 செ.மீ விட்டமும் 18.901 கிராம் எடையும் கொண்ட ஒரு தங்கப் பதக்கம்
இரண்டு தங்க மோதிரங்கள்
ஒரு தங்கச் சங்கிலி
நான்கு சிறிய தங்க மணிகள்
ஆறு ரோமானிய நாணயங்கள்
இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ரோமானிய நாணயங்களில், நீரோ காலத்திய இரண்டு (கி.பி. 54–58), வெஸ்பாசியன் காலத்திய ஒன்று (கி.பி. 69–79), டொமிஷியன் காலத்திய இரண்டு (கி.பி. 81–96) மற்றும் ஹாட்ரியன் காலத்திய ஒன்று (கி.பி. 117–138) இடம்பெற்றிருந்தன.
இந்த தங்கப் பதக்கத்தை அடையாளம் காணும் நோக்கில், மெட்ராஸ் அரசு அருங்காட்சியகம் 1960-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் துறைக்கு அனுப்பியது.
பிரிட்டிஷ் நாணயவியல் நிபுணரும் தொல்பொருள் ஆய்வாளருமான ஏ.டி.எச். பிவார், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் தகவலின்படி, அந்த தங்கப் பதக்கம் எகிப்தின் தாலமி II (கி.மு. 284–247) முதல் தாலமி X (கி.மு. 117–81) வரையிலான பல்வேறு மன்னர்களைச் சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பழமையான வணிக நகரமாக இருந்திருக்கலாம்
தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர் பேராசிரியர் கா. ராஜன் கூறுகையில், "கரிவலம்வந்தநல்லூர், செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லும் பழமையான வணிகப் பெருவழியில் அமைந்துள்ளது. எனவே இது ஒரு முக்கிய வணிக நகரமாக இருந்திருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்தே இந்தப் பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது" என்றார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் கீழடி, பட்டணமருதூர், கரிவலம்வந்தநல்லூர், மணிக்கொல்லை, ஆதிச்சனூர், வெள்ளலூர், தெலுங்கனூர்-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி கோரி இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் (ASI) விண்ணப்பித்திருந்தது. அதற்கு 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூரில் அகழாய்வு தொடங்கப்பட்டது.
"காரிச்சாத்தான் மலையின் தென்புறத்தில் மக்கள் வாழ்விடங்களும், வடபுறத்தில் ஈமச்சின்னங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அதிக தகரம் கலந்த வெண்கலத் துண்டும் கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, சாஸ்தாபுரம், திருமலாபுரம் மற்றும் சூலாபுரம் போன்ற முதுமக்கள் தாழி அடக்க முறையுடன் தொடர்புடைய தளங்களிலும் இதுபோன்ற அதிக தகரம் கலந்த வெண்கலம் கிடைத்துள்ளது" என்று பேராசிரியர் கா. ராஜன் தெரிவித்தார்.
அவர் மேலும், "ஈமத்தாழிகளில் மயில்கள் வரையப்பட்டுள்ளன. கரிவலம்வந்தநல்லூர் ஒரு இரும்பு உற்பத்தி மையமாக இருந்திருக்கலாம். ஹேமடைட் (Hematite) இரும்புத் தாதுவுடன் கூடிய இரும்புக் கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தளம் நுண்கற்காலத்திலிருந்து இரும்புக்காலம் வழியாக தொடக்க வரலாற்றுக் காலமான சங்ககாலம் வரை படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்" என்றார்.
கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வில் முக்கிய கவனம் பெற்றுள்ள கண்டுபிடிப்புகளில் ஒன்று செங்கற்களால் கட்டப்பட்ட கட்டட அமைப்பாகும். அகழாய்வு அலுவலர் காளீஸ்வரன் கூறுகையில், "40 சென்டிமீட்டர் அகலம், 20 சென்டிமீட்டர் நீளம், 7 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. படிகளுடன் அமைந்துள்ளதால் இது சதுர வடிவ கிணறாக இருக்கலாம். இந்த கட்டுமானம் களிமண் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டடங்கள் முதன்முதலில் கீழடி அகழாய்வில்தான் வெளிப்பட்டன. அங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள் மற்றும் தொல்லியல் பொருட்கள், கீழடியில் நகர நாகரீகம் இருந்ததை உறுதிப்படுத்தின.
இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கம் இருந்தாலும், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற கருத்து நிலவியது. கீழடி அகழாய்வு அந்தக் கருத்தை மாற்றியது.
அதேபோல, தற்போது கரிவலம்வந்தநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் மற்றும் பிற தொல்லியல் பொருட்களும், இப்பகுதியிலும் நகர நாகரீகம் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆரம்பகட்ட சான்றுகளாகக் கருதப்படுகின்றன என்று அகழாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள குறியீடுகள் கொண்ட கறுப்பு-சிவப்பு பானை ஓடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் உள்ளிட்ட தொடக்க வரலாற்று கால தொல்லியல் தளங்களிலும் இதுபோன்ற குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கையின் திசமஹரம, கந்தரோடை, மாந்தை மற்றும் ரிதியகாமா பகுதிகளிலும் இதேபோன்ற குறியீடுகள் பதிவாகியுள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் சேகரிக்கப்பட்டுள்ள இத்தகைய குறியீடுகளில் 75 சதவீதம் தமிழகத்திலேயே கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உரோம நாட்டு தொழில்நுட்பச் சாயலுடன் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரௌலட்டட் பானை ஓடுகளும் கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள் அனைத்தும் 'ரிலேடிவ் டேட்டிங்' முறையில் கீழடி உள்ளிட்ட முக்கிய அகழாய்வு தளங்களில் கிடைத்த பொருட்களுடன் ஒத்துப்போவதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இதனால், அவை கி.மு. 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத்தைச் சார்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
எனினும், இதை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தும் கார்பன் காலக்கணிப்பு (Carbon Dating) பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை. அதற்கான மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே இந்தத் தளத்தின் காலம் உறுதிப்படுத்தப்படும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கரிமப் பகுப்பாய்வு, அந்தப் பண்பாடு கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் உருவான அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் நகர நாகரீகம் இருந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை கீழடி வெளிப்படுத்திய நிலையில், தற்போது கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களும் அதே வரலாற்றுப் பின்னணியை வலுப்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து பேராசிரியர் கா. ராஜன் கூறுகையில், "கரிவலம்வந்தநல்லூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான வணிகப் பெருவழியில் அமைந்துள்ளதால் இது ஒரு இரண்டாம் நிலை நகரமாக இருந்திருக்கலாம். ஆனால், கீழடியில் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகே பெரிய நகர நாகரீகம் உறுதிப்படுத்தப்பட்டது. அதுபோல இங்கும் அடுத்தடுத்த அகழாய்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்" என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.