ஒரு இளவரசரின் குடிபோதை... ஆங்கிலேயரின் மரணம்! சவூதி அரேபியாவில் மது தடை செய்யப்பட்டதன் பின்னணி தெரியுமா?"

அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளவரசர், போதையில் அங்கிருந்த ஒரு ஆங்கிலேயப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்...
ஒரு இளவரசரின் குடிபோதை... ஆங்கிலேயரின் மரணம்! சவூதி அரேபியாவில் மது தடை செய்யப்பட்டதன் பின்னணி தெரியுமா?"
Published on
Updated on
2 min read

இஸ்லாமியச் சட்டங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் சவூதி அரேபியா, பல தசாப்தங்களாகக் கடுமையான மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறது. பெரும்பாலானோர் இந்தத் தடைக்கு மதக் காரணங்கள் மட்டுமே அடிப்படை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தத் தடை அமலுக்கு வந்ததற்குப் பின்னால், 1951-ம் ஆண்டு நடந்த ஒரு துயரச் சம்பவமும், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளவரசரின் வரம்பு மீறிய செயலும் முக்கியக் காரணமாக அமைந்தன என்பது பலருக்கும் தெரியாத வரலாறாக உள்ளது. அந்தச் சம்பவம்தான் சவூதியின் மதுபானக் கொள்கையையே தலைகீழாக மாற்றியது.

சவூதி அரேபியா உருவான காலகட்டத்திலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அங்குள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனப் பணியாளர்கள் மத்தியில் மது அருந்தும் வழக்கம் கட்டுப்பாடுகளுடன் இருந்து வந்தது. 1951-ம் ஆண்டு, பிரிட்டிஷ் துணைத் தூதராகப் பணியாற்றிய சிரில் உஸ்மான் (Cyril Ousman) என்பவரின் வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விருந்தில், சவூதி மன்னரின் மகன்களில் ஒருவரான 19 வயது இளவரசர் மிஷாரி பின் அப்துல்அஜிஸ் (Mishari bin Abdulaziz) கலந்துகொண்டார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளவரசர், போதையில் அங்கிருந்த ஒரு ஆங்கிலேயப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.

நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த சிரில் உஸ்மான், இளவரசருக்கு இனி மது வழங்கக் கூடாது என்று மறுத்ததுடன், அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அவமானமடைந்த இளவரசர் மிஷாரி, கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ஆனால், அந்தப் போதையும் கோபமும் மறுநாளும் அவருக்குத் தீரவில்லை. மறுநாள் மீண்டும் உஸ்மானின் வீட்டிற்குச் சென்ற இளவரசர், தனக்குக் கூடுதல் மது வேண்டும் என்றும், அந்தப் பெண்ணை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தகராறு செய்தார். உஸ்மான் மீண்டும் மறுக்கவே, ஆத்திரமடைந்த இளவரசர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் உஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் சவூதி அரேபியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது வெறும் ஒரு கொலை வழக்காக மட்டுமல்லாமல், ஒரு மாபெரும் இராஜதந்திரச் சிக்கலாகவும் (Diplomatic Scandal) மாறியது. தனது சொந்த மகனே இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தது மன்னர் அப்துல்அஜிஸுக்குப் (King Abdulaziz) பெரும் தலைகுனிவையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. உடனடியாக இளவரசரைக் கைது செய்ய உத்தரவிட்ட மன்னர், இந்தக் குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கத் தயாரானார். உயிரிழந்த உஸ்மானின் மனைவிக்கு, இளவரசரை எந்த முறையில் தண்டிப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை மன்னர் வழங்கினார். தேவைப்பட்டால் பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்னால் இளவரசரின் தலை துண்டிக்கப்படும் என்று கூட அவர் உறுதியளித்தார்.

ஆனால், உஸ்மானின் மனைவி மரண தண்டனையை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அவர் 70,000 டாலர் நஷ்டஈடாகப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தார். இதையடுத்து, இளவரசர் மிஷாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்குத் தனது மகன் மட்டுமல்ல, மேற்கத்தியப் பழக்கவழக்கங்களும், குறிப்பாக மதுப்பழக்கமுமே முழுக் காரணம் என்று மன்னர் நம்பினார். 'வெளிநாட்டுப் பழக்கங்கள்' தங்கள் உயர்குடி மக்களையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதாக அவர் கருதினார்.

இதன் விளைவாக, இந்தச் சம்பவம் நடந்த ஓராண்டிற்குள், அதாவது 1952-ம் ஆண்டு, மன்னர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, சவூதி அரேபியா முழுவதும் மதுபானங்களை இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது மற்றும் அருந்துவது என அனைத்தும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டது. 1952-ம் ஆண்டின் பிற்பகுதியில், சவூதி அரேபியாவில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டன. எண்ணெய் நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விஸ்கி ரேஷனும் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சவூதி அரேபியா உலகின் மிகக் கடுமையான மதுவிலக்குச் சட்டங்களைக் கொண்ட நாடாகத் திகழ்ந்து வருகிறது.

தற்போது, 'விஷன் 2030' (Vision 2030) திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சில தளர்வுகளைச் சவூதி அரசு அறிவித்து வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களில், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் உயர் வருவாய் கொண்ட வெளிநாட்டினருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் மது வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், 1951-ல் நடந்த அந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையே மாற்றி எழுதியது என்பது வரலாற்றில் அழியாத வடுவாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com