

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ளன. எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் களத்துக்கு செல்லும் கட்சிகளுக்கு, மக்களின் ஏமாற்றமும் எதிர்ப்பும் அதிர்ச்சி அளித்துள்ளது. இடைத்தேர்தல் என்றாலும், கூட்டணிகள் அமைவதிலும் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருந்துள்ளன.
தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த இடதுசாரிகள் தனியாக தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளனர். முக்கியமான ஒன்று, பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்ற முடிவை எடுத்திருப்பது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாமக. 18 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாமகவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் வன்னியர் பெல்ட் தொகுதிகளில் அதிமுக மற்றும் தவெக கட்சிகள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளன. அதிமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் பாமகவுக்கு கணிசமான பங்கு உள்ளது.
இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளில், மதுராந்தகம் கணிசமான வன்னியர் மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் ராஜினாமா செய்த வேட்பாளர்களையே மீண்டும் நிறுத்தியுள்ளது தவெக. இருவருக்குமே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. மரகதம் குமாரவேலுக்கும், சத்யபாமாவுக்கும் வாக்களித்த அதிமுக மற்றும் பாமக ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை களத்தில் பார்க்க முடிகிறது.
மரகதம் குமாரவேலுக்கு மதுராந்தகத்தில் தனிப்பட்ட செல்வாக்கு குறைவு. கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாமக வாக்குகளே அவரை வெற்றிபெறச் செய்திருந்தன. மொத்தமாக 69,284 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இரண்டாவது இடத்தில் தவெக வேட்பாளர் எழில் கேத்ரீன் 62,090 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமார் 7,000 வாக்குகள், 4% வித்தியாசம்.
மூன்றாவதாக 59,838 வாக்குகளைப் பெற்று திமுக இடம்பிடித்திருந்தது. திமுக - தவெக இடையே சுமார் 2,300 (1.25%) வாக்குகள்தான் வித்தியாசம்.
கடந்த தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளையும் விட கணிசமான கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதால், எளிதாக வெற்றிபெற முடியும் என்றே அதிமுகவினர் நினைத்திருந்தனர்.
ஆனால், பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை எனக் கூறிவிட்டதால், அதன் மொத்த வாக்குகளையும் பெற முடியாது என்பதை அதிமுக முகாம் உணர்ந்துள்ளது.
மதுராந்தகத்தில் பாமக வாக்குகள் என்பது வெறும் சாதிக் கணக்கு மட்டுமல்ல. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்து நின்ற பாமக, 16,215 வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பெற்றது. எந்தக் கூட்டணியும் இல்லாமல் 9.19% வாக்குகள் என்பது சாதாரணமானதல்ல.
இத்தனை வாக்குகள் சிதறுவதால், கடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வைத்து முடிவுகளை கணிக்க முடியாது. இப்போது பாமக வாக்குகளை யார் கைப்பற்றுவது என்பதில்தான் கட்சிகளுக்கு இடையே போட்டியே நடக்கிறது. 3 கட்சிகளும் கிட்டத்தட்ட சரிக்குச் சமமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
பாமக வாக்குகளை கைப்பற்றும் வேலையில் ஏற்கெனவே இறங்கிவிட்டது தவெக. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அன்புமணியை கூட்டணியில் இணைத்துக்கொள்வது குறித்து தவெக சிந்தித்து வருவதாக முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை இரு கட்சியினரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்த அன்புமணி திடீரென ஆதரவை விலக்கிக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் பங்கு கொடுக்கவும் தவெக முன்வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஐடியாவுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது விசிக. பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறுவதில்லை என்பதில் விசிக உறுதியாக இருக்கிறது.
விசிக இல்லாமலேயே பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற முடிவதானால், தவெக முகாமுக்கு வன்னியர் வாக்குகளைப் பெற்றுத்தரும் பாமகதான் முக்கியம் என்றும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் விசிகவின் ஆதரவும் கூட தேவைப்படாது என்றும் அன்புமணியை கன்வின்ஸ் செய்ய தவெக தளபதிகள் களமிறங்கியுள்ளனர்.
பாமகவின் 4 எம்எல்ஏ-கள் ஆதரவு இருந்தால் இடதுசாரிகள் மற்றும் விசிகவின் ஆதரவு தேவை இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் வட தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெறமுடியும். இந்த திட்டங்களுக்கு இருக்கும் ஒரே தடை அன்புமணி பாஜகவின் NDA கூட்டணியில் இருப்பதுதான். அன்புமணி கூட்டணியை முறித்துக்கொள்வாரா என்பது பெரும் கேள்வி. அதற்கான விடையைக் கண்டறிய இன்னும் நேரம் உள்ளது.
"ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு பாமக - தவெக கூட்டணி அமைக்கலாம்" என்ற பேச்சை உருவாக்கிவிட்டாலே தவெக வெற்றி எளிதாகிவிடும் என்பதுதான் இன்றைய கணக்கு.
ஆனால் செய்தியாளர் சந்திப்பில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, "அன்புமணி இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து தவெகவுக்கு எதிரான பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்ததார். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் எந்த கூட்டணிக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இது பாமக தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக காட்டினாலும், எதிர்ப்புக்கு காரணம் என்ன? எவ்வளவு வலுவான எதிர்ப்பு என்பது அன்புமணிக்குதான் வெளிச்சம்.
மறுபக்கம் தவெகவை தீவிர விசிக ஆதரவு கட்சியாக காட்டுவதன் மூலம் பாமக வாக்குகளைப் பெற முடியும் என்ற முயற்சியில் உள்ளது திமுக.
உதாரணமாக, அமைச்சர் வன்னி அரசிடம் விடுதி மாணவர்கள் மாட்டுக்கறி கேட்ட விவகாரம் உள்ளிட்டவற்றை பூதாகரமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விஜய் கூட்டணிக் கட்சியினருடன் பிரசார மேடையைப் பகிராததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
அன்புமணியிடம் நேரடியாகப் பேசி, அவரது ஆதரவாளர்களை திமுகவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் வேலையிலும் திமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அன்புமணி NDA கூட்டணியில் இருப்பது இதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இப்படியான சூழலில்தான் யாருக்கும் ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்று, மூன்று கட்சிகளும் முட்டி மோதுவதை வேடிக்கை பார்க்கிறது பாமக. அன்புமணியின் செல்வாக்கு 2016-ல் இருந்த அதே 9% என்றாலும், 3 கட்சிகளுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 5% கூட இல்லை. இதனால்தான் பாமகவின் வாக்குகள் அதீத முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன.. அன்புமணியிடம் இருந்து தங்கள் கட்சிக்கு ஆதரவான ஒரு சிக்னலைப் பெற முடியுமா என்பதில்தான் 3 கட்சிகளின் போட்டியும் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்