

வரலாற்றிலும், புராணங்களிலும் இன்று வரை ஒரு மிகப் பெரிய மர்மமாகவும், தேடலின் உச்சமாகவும் இருப்பது அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம் பற்றியக் கதைதான். இது வெறும் கற்பனைக் கதை அல்ல; ஏறக்குறைய கி.மு. 360-இல் கிரேக்கத் தத்துவஞானியான புளூட்டோ எழுதிய 'திமேயஸ்' மற்றும் 'கிரிடியாஸ்' என்ற உரையாடல்கள் மூலமாகத்தான் இந்த நகரம் உலகிற்கு முதன்முதலில் அறிமுகமானது. புளூட்டோவின் கூற்றுப்படி, அட்லாண்டிஸ், 'ஹெர்குலஸ் தூண்களுக்கு' (இன்றைய ஜிப்ரால்டர் நீரிணை) அப்பால், அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமானத் தீவாகும். இந்த நகரம் அதன் செல்வ செழிப்பு, படை வலிமை மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பங்களால் புகழ்பெற்றிருந்தது.
அட்லாண்டிஸ்ஸின் மக்கள், 'அட்லாண்டியர்கள்' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், இந்தப் பிரம்மாண்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. புளூட்டோவின் கூற்றுப்படி, அட்லாண்டியர்கள் காலப்போக்கில் பேராசை, ஒழுக்கமின்மை மற்றும் அதிகார வெறி ஆகியவற்றால் பாழடைந்தனர். அவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை இழந்து, மற்ற நாடுகளை அடிமைப்படுத்த முயன்றபோது, கடவுள்களின் கோபத்திற்கு ஆளானார்கள்.
அட்லாண்டிஸ் நகரத்தின் அழிவிற்குக் காரணமாகப் புளூட்டோ இரண்டு விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார். முதலாவது, அவர்களின் தார்மீகச் சீரழிவு. அட்லாண்டியர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மற்றவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியபோது, நீதிக்குப் பொறுப்பான கடவுள்கள் தலையிட்டார்கள். இந்தச் சீரழிவுதான் நகரத்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும்.
மற்றொரு காரணம், ஒரு நாள் மற்றும் ஓர் இரவில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றமும், நில நடுக்கமும். கடவுள்களின் தண்டனையாக, ஒரு மிகப் பெரிய நில நடுக்கம் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஒரே நாள் இரவில் அட்லாண்டிஸ் நகரம் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிப் போனது என்று புளூட்டோ கூறுகிறார். இந்த நகரத்தின் அதிநவீனத் தொழில்நுட்பம் கூட, இயற்கைச் சீற்றத்திலிருந்து அதனைக் காக்க முடியவில்லை.
அட்லாண்டிஸ் குறித்த இந்த மர்மம் இன்றும் நீடிக்கிறது. அறிவியல் ரீதியாக, அட்லாண்டிஸ் நகரத்தின் இருப்பிடத்தை யாரும் உறுதி செய்யவில்லை. பலர் இதை வெறும் கட்டுக்கதை என்றாலும், அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் இந்த நகரம் புதைந்திருக்கலாம் என்று நம்புபவர்களும், அதைத் தேடுபவர்களும் இருக்கிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.