சிட்டுக்குருவிகள்...காலையில் நம் வீட்டின் அருகே கீச் கீச் என்ற சத்தத்துடன், நம்மை எழுப்பும். ஆனால் இப்போதோ, அந்த சிட்டுக்குருவிகளை தேடிப் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது.
அமைதியான சுபாவம் - சுறுசுறுப்பான தன்மை:
யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம், சுறுசுறுப்பு உற்சாகத் துள்ளல், எந்நேரமும் படு ஜாக்கிரதையான உருட்டும் விழிப்பார்வை, கீச்சு.. கீச்சு.. என்று கத்தும் மெல்லிய குரல், அப்பாவியான தோற்றம் என்று, பார்த்தவுடன் மனதை ஈர்க்கும் மந்திர சக்தி கொண்டதுதான் இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்.
சிட்டுக்குருவிகள் மனிதர்ளை சார்ந்தே வாழும் பறவை. அவற்றின் கூடுகள் நமது வீட்டின் முற்றம், கூரை இடுக்கு என்று நம்மை சுற்றியே இருந்து வந்தது.
ஆனால் அந்த இனம் அழிந்து வருவதற்கு மனிதர்களே காரணம் என்பதுதான் வேதனையின் உச்சம்.
அழிவின் பாதையில் சிட்டுக் குருவிகள்:
சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் அதன் வாழ்விடம் அழிந்து வருவதுதான். முன்பெல்லாம் ஓலை வீடுகளும் ஓட்டு வீடுகளும் நிறைந்திருந்தன. இந்த ஓலை, ஓடுகளின் இடுக்குகளில் வாசலின் முற்றத்தில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்யும்.
நாளடைவில் மாடி வீடுகளாக மாறிய பின்னர், ஜன்னல் வழியாகவும், வீட்டிற்குள் வந்து, பரண் மீதும், ஜன்னல் மறைவிலும் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.
ஆனால் இப்போதோ, வானுயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள், கண்ணாடி கதவு போட்ட ஜன்னல்கள், முழுவதும் மூடப்பட்ட ஏசி வீடுகள். பாவம் சிட்டுக்குருவிகள் என்னதான் செய்யும்.
மரங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருவதால், வாழ்விடம் இழந்த சிட்டுக்குருவிகள், நகர்புறத்து வீடுகளில் வசிக்கத்தான் இடமில்லை, கிராமங்களுக்கு சென்று, விளை நிலங்களில் உள்ள புழு, பூச்சிகளையும் கொத்தித்தின்று வாழலாம் என்றால், அங்கு பேராபத்தை ஏற்படுத்தும் ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளால், புழு, பூச்சிகள் மடிந்து, குருவிகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாழ்விடம் தேடி உயரமான கோபுரங்களில் தஞ்சமடைந்தன சிட்டுக் குருவிகள். ஆனால் அந்த கோபுரம் செல்போன் கோபுரமாய் போனது மற்றுமொரு சோகம்...
செல்போன் கோபுரத்தில் இருந்து வெளிவரும் கதிர்களால் சிட்டுக்குருவியின் முட்டைகள் பாதிக்கப்பட்டு, முட்டைகள் குஞ்சு பொறிக்காமல் போனது. இதனால் சிட்டுக்குருவியின் இனம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் நாளை நம் குழந்தைகளுக்கு சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே காண்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிட்டுக்குருவிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் :
சரி சிட்டுக்குருவி இனங்களை ஏன் பாதுகாக்க வேண்டும். அதனால் நமக்கு என்ன நன்மை என்று கேட்கிறீர்களா...?
சிட்டுக்குருவிகள் கொசுக்களையும், அதன் முட்டைகளையும் உணவாக தின்னும் இதனால் கொசுக்கள் உற்பத்தி குறைந்து மனிதனுக்கு ஏற்படும் தொற்று நோய் குறையும்.
அதுமட்டுமல்ல, வயல்வெளிகளில், பயிர்களைத் தாக்கும் பூச்சி, புழுக்களையும், வெட்டுக்கிளிகளையும் இந்த சிட்டுக்குருவிகள் உணவாக உட்கொள்கின்றன.
இதனால் பயிர்கள் காப்பாற்றப்படுவதால் சிட்டுக்குருவிகள் விவசாயத்திற்கு நண்பனாகவே விளங்குகின்றன.
சிட்டுக்குருவிகள் இனம் அழிந்துவிட்டால் வெட்டுக்கிளி போன்ற பயிர்களை அழிக்கும் பூச்சிகள் உற்பத்தி அதிகரித்து, விளை பொருட்கள் முழுமையாக அழித்துவிடும். விளை பொருட்கள் இல்லை என்றால் பஞ்சம், பசி ஏற்பட்டு மனித இனமே அழியும் அபாயம் உள்ளது.
எனவே மனித இனம் வாழ்வதற்காகவாவது சிட்டுக்குருவிகள் இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலக சிட்டுக்குருவிகள் தினம்:
சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதை கருத்தில் கொண்டு, சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நாள், இயற்கையின் சமநிலையை காக்க மனிதர்களோடு நெருங்கி வாழும் இக்குருவிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
ஆனால் இந்த நாளை நாம் எப்படி நினைவுகூறுகிறோம் தெரியுமா...?
"இன்று சிட்டுக்குருவிகள் தினம்... "
"சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்... "
"வெயில் காலம் தொடங்கிவிட்டதால் சிட்டுக்குருவிகளுக்கு, தீனியும், தண்ணீரும் வையுங்கள்"
என்று நாம் அனைவரும் தவறாமல் whatsapp-ல் status வைக்கிறோம். அதோடு நமது கடமை முடிந்துவிட்டது.
நமது status-சை பார்த்து, அனைவரும் குருவிகளுக்கு தீனியும் தண்ணீரும் வைப்பார்கள் என்றும் நினைக்கிறோம்.
ஆனால், மாறாக, நம்மைப் போலவே அனைவரும் status மட்டுமே வைப்பதுதான் வேதனை...! வேதனை...!
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் :
சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நாம் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய பெட்டியில் ஓட்டை போட்டு கைக்கு எட்டாத உயரத்தில் பாதுகாப்பாக மாட்டிவிட்டால் போதும். அதனோடு, கொஞ்சம் தானியங்களும், சிறிதளவு தண்ணீரும் வைத்தாலே போதும். அந்த இனம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
இந்த வரிகளை எழுதும்போது, மகாகவி பாரதியாரின்
"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்!"
என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
இந்த உலகம், நமக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானது என்பதை உணர்வோம்...சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்களை பாதுகாத்து, இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.