அளவில்லா அருள் தரும் அகரம் ஸ்ரீ முத்தாலம்மன்

பல்லி சப்தமிட்டால் அம்மன் உத்தரவிட்டதாக நம்பிக்கையுடன் நற்செயல்களை தொடங்கும் அதிசயங்கள் நிறைந்த சர்வ சக்தி படைத்த கோவிலைப் பற்றியும், அங்கு தற்போது நடக்கின்ற ஐப்பசி திருவிழாவின் சிறப்புக்களை பற்றி காண்போம்…
agaram muthalamman
agaram muthalammanAdmin
Published on
Updated on
2 min read

இச்சா, கிரியா, ஞான சக்தி ஆகிய முப்பெரும் தேவியராக கருவறையில் அட்சய பாத்திரத்தை ஏந்தியபடி காட்சி தரும் முத்தாலம்மன், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகிலுள்ள அகரம் எனும் ஊரில் கோவில் கொண்டு நாடி வந்தோருக்கு கோடி புண்ணியம் அருள்கிறாள்.

அகரத்தம்மன் அகரத்தாய் என்று பக்தர்களால் அழைக்கப்படும் அட்சயபாத்திரத்தை ஏந்தி நிற்கும் அம்மனை தரிசித்தால் ஐஸ்வர்யம் பெருகி கடன் தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆந்திர மன்னர் ஒருவரிடம் கணக்கராகப் பணிபுரிந்த அதிவீர சக்கரராயர் என்பவர் அம்மனின் கட்டளைப்படி அம்பாளையும் பூஜைப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு, தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அகரம் எனும் ஊரில் குடகனாற்று தீரத்தை அவர் அடைந்ததும் அம்மனின் சப்தம் ஒலித்தது.

நீ நிற்கும் இடத்தில் தன்னை வைத்து பூஜிக்கும் படி உத்தரவிட்டதால், அதிவீர சக்கரராயர் தான் நின்ற இடத்திலேயே அம்மனுக்கு கோவில் எழுப்பி வழிபட்டதாக தல வரளாறு கூறுகிறது.

அதன் சாட்சியாக இன்றளவும் கோவில் கருவறைக்குள் அம்பாளுக்குப் பக்கத்திலேயே, சக்கர ராயர் பயன்படுத்திய பெட்டிக்கு பக்தர்களால் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோயில் முகப்பில் பூத ராஜா, பூத ராணி இருவரும் காவல் தெய்வங்களாகத் காட்சியளித்து வரும் நிலையில் அவர்களின் பாதத்தில் தங்கள் குலம் காக்க வேண்டும் என விளக்கேற்றி பக்தர்கள் பிராத்தனை செய்கின்றனர்.

கோவிலின் உள்ளே அருள்ஞான சுந்தர மகாகணபதி, பால முருகன், நான்கு முக லிங்கமாகக் காட்சி தரும் லிங்கேஸ்வரர், விசாலாட்சி, மகாலட்சுமி, மங்கல துர்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ள நிலையில் விரிந்த கண்கோளோடும், மலர்ந்த முகத்தோடும், மலர் மாலைகளை தாங்கிய உடலோடும் மஞ்சள் நிற நாயகியாக கருவறையில் காட்சி தருகிறாள் முத்தாலம்மன் …

இத் திருக்கோயிலுக்கு முன்பாக ஓடும் குடகனாறு, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, பின்னர் வடக்காகத் திரும்பி, மீண்டும் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தனது புனித நீரால் நீராபிஷேகம் செய்து சக்திதேவியின் அருளால் வற்றாது ஓடுகிறது.

முத்தாலம்மன் கருவறையில். பிரம்ம ஞானி ஒருவரின் ஜீவசமாதி இருப்பதோடு அவரது பாதுகைக்கு, முதல் பூஜையும் நைவேத்தியமும் செய்யப் படுகின்றது.

இக்கோயிலின் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் ஐப்பசியில் நடைபெறும் திருவிழாவுக்கு முன்னதாக, கோயில் முகப்பில் உள்ள பூத ராணியின் முன்பு ஊர்மக்கள் ஒன்று கூடி உத்தரவு கேட்கின்றனர். அப்போதுதான அந்த ஆச்சரிய நிக்ழ்வு அரங்கேறுகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பல்லி ஓசை வந்தால் மட்டுமே அம்மன் உத்தரவு தந்ததாக திருவிழா நடத்தப்படுகிறது. இப்படி பல்லி ஓசை கேட்காமல் சில வருடங்கள் திருவிழா நடக்காததால் பக்தர்கள் கலக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆதி சக்தியின் உத்தரவிற்கு பின் நடத்தப்படும் விழாவின்போது உற்சவ அம்பிகையுடன், இந்த ஆபரணப் பெட்டியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெட்டியை கண்ணால் கானும் பேரு பெருகின்றனர்... அதனால் பெரு வாழ்வு அடைகின்றனர்.

இந்த விழாவின்போது, தற்காலிகமாகச் செய்யப்படும் அம்பாள் சிலை, பூஞ்சோலை என்னும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பீடத்தில் வைக்கப்படும். வருடம் தோறும் மிகத் துல்லியமாக விழா தருணத்தில் பெருமழை பெய்து அம்பாளின் சிலை கரைவது, கலியுக அதிசயமாக நடந்து வருகிறது.

இன்னும் சிறப்பாக ஆயிரம் கண்ணுடைய அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்வின் போது மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. ஆட்சியர், அதிகாரிகள் சுற்றுப்புற ஊர் பெரியோர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க, மேள தாள வாத்தியங்கள் முழங்க அம்மனின் திருவுருவ திரை நீக்கி கண் திறப்பு வைபவம் நடத்தப்படுகிறது.

உடல் நலம் வேண்டி அம்மனிடம் வேண்டுதல் செய்வோர் மண் பொம்மைகளை ஆண்பூதம் மற்றும் பெண் பூதம் இருக்கும் இடங்களில் நேர்த்திக்கடனாக வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டியவர்கள் அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது இக்கோயிலின் சிறப்பை பறைசாட்டுகிறது.

திருவிழாவுக்காக மட்டுமல்ல, இப்பகுதி மக்கள் பலரும் தங்கள் சுபகாரியங்கள், புதிய முயற்சிகள், தொழில் தொடங்குதல் ஆகியவற்றுக்காகவும் பூத ராணியின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுகிறார்கள். பூதராணி உத்தரவு கொடுத்துவிட்டால், எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது . திருவிழாவின் போது கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் கம்பு சோளம் கேழ்வரகு மற்றும் கடலை உட்பட வேளாண் விலை பொருட்களையும் ஆடு மற்றும் கோழிகளை காணிக்கையாக அளித்து நல்லதை தரும் முத்தாலம்மனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

இந்தாண்டு விமரிசையாக நடந்து வரும் விழாவைக்காண லட்சக்கணக்கான மக்கள் அத்தலத்தில் குவிந்து வரும் நிலையில் நாமும் இருகண்களால் திருவிழா காட்சிகளை கண்டு உள்ளம் உருகி முத்தாலம்மன் எனும் உலக நாயகியை வணங்குவோம்

மாலை முரசு செய்திகளுக்காக திண்டுக்கல்லில் இருந்து செய்தியாளர் ராஜ்குமாருடன் நந்தகுமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com