பிரபஞ்ச பால் வெளியில் சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோள்கள் பூமியில் வாழும் மக்களின் விதியை தீர்மானிப்பதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. கோள்களின் இருப்பிடம் ஒவ்வொரு இராசி கட்டமாக மாறி மாறி பயணிக்கும் பொழுது அவை இருக்கும் இடத்தை பொறுத்து நட்பு, நீச்சம், பகை என ஐந்து நிலைகளில் ஏதாவது ஒரு தன்மையை ஒவ்வொரு ராசிக்கும் நவகிரகங்கள் வெளிப்படுத்தும். இதனால் தான் மனிதனின் வாழ்வில் நன்மைகளும் தீமைகளும் மாறி மாறி வருவதாக ஜோதிடங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வில் பல மாற்றங்களைத்தரும் நவக்கிரக கோள்களை மன முருக வேண்டினால் துன்பங்கள் விலகி ஏற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இது மனிதனுக்கு மட்டுமல்ல அவதார புருஷர்களுக்கும் இதே நிலைதான்.
அவதாரபுருஷ்ரான ராம பிரான் சீதையை மீட்க புறப்பட்ட போது அவரால் உருவாக்கப்பட்ட நவக்கிரகோயில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் கடலின் நடுவே காட்சியளிக்கிறது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது என்ற நவக்கிரகங்கள் தமிழகம் முழுவதும் ஏராளமான கோயில்களில் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வீற்றிருக்கும் வேளையில் இந்த தேவிப்பட்டினத்தில் கடல்நீர் சூழ ஒவ்வோரு திசைகளை நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறது.
சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்லும் முன், ராமபிரான் உப்பூரில் உள்ள விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினம் கடலில் இறங்கி மணலைப் பிடிக்க அது ஒன்பது கற்களாக மாறியது. அந்த கற்களையே ராமபிரான் நவகிரகங்களாக பாவித்து வழிபட தொடங்கினார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், அதனை தன் கைகளினால் தடவி அமைதிப்படுத்தியதையடுத்து இன்று வரை இந்த கடல் அலைகள் அதிகம் இல்லா அமைதியான கடலாக காணப்படுகிறது.
இந்த நவகிரகங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேக, ஆராதனைகள் செய்வதோடு கடல் தீர்த்தத்தில் நீராடி நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம்வந்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் இந்த நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்தி தங்கள் முன்னோர்களின் ஆசியை பெருகின்றனர்.
கடலின் பாலம் அமைக்கப்பட்டு நவகிரக சன்னதிக்கு செல்லும் போது இறைவழிபாட்டில் புது அனுபவத்தை பெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக தேவிப்பட்டினம் செய்தியாளருடன் கலைமாமணி நந்தகுமார்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்