உயரமான உருவமும், கருத்த உடலும்
அடர்ந்த மீசையும் , உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் தான் கருப்பசாமி எனும் காவல் தெய்வம்.
நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருக்கும் கருப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் மக்கள் போற்றி வணங்கப்படுவர்.
கருப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி பல பெயர்களால் அழைக்கப்படும் நிலையில் அவர் மனிதர்களை மட்டுமல்ல சகல உயிர்களையும் காத்து நிற்கிறார்
ராமாயண கதையில வாள்மீகி முனிவர் தம் தவ வலிமையால் தர்ப்பை புல்லில் இருந்து உருவாக்கப்பட்ட லவன் என்ற சிறுவன், யாகத்தீயில் கருகிய போது ராமனால் கருப்பா வா என்று அழைக்கப்பட்டு தோன்றியவர் தான் கருப்பசாமி.
வேலூர் மாவட்டம் ஆற்காடு சாலையில் முப்பது பெட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த தோப்பு கருப்பர் சுவாமி கோவிலுக்கு செல்பவர்களின் மரண பயம்.மூற்றிலும் நீங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவிலின் நுழைவு வாயிலில் இரு வெள்ளை குதிரைகளுக்கு நடுவில் ஆக்ரோஷத்துடன் நிற்கிறார் கருப்பண்ணசாமி,....
ஆலயத்தின் உள்ளே சாலை ஓரமாக பதினெட்டு படிகளுக்கு மேலே 36 அடி உயரத்தில் வலது கரத்தில் நீண்ட கூர்மையான அறிவாளோடும், இடது கரத்தில் எதிரிகளை சிதறடிக்கும் கதை என்னும் ஆயுதத்தை எருமையின் தலையில் வைத்தபடியும், ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக சூட்டி கொண்டு பிரமாண்ட உருவமாக காணப்படுகிறார்.
சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், பச்சை செடி கொடிகளும் படர்ந்து இருக்கும் இந்த தோப்பு கருப்பண்ண சுவாமி கோவிலில் சட்டை நாதர், கமலமுனி, பச்சை முனி, தன்வந்திரி, இடைக்காடர் போகர், அகத்தியர் போன்ற 18 சித்தர்களின் சிலைகள் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வது போல அமைந்திருக்கிறது
வேறு எங்கும் காண முடியாத படி சிவலிங்கத்திற்கும் அதன் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருப்பண்ணசாமி சிலைக்கும் ஒரு பக்கம் மஞ்சளும் மறுபக்கம் குங்கும அபிஷேகமும் நடக்கிறது. இந்த அபிஷேகத்தைக்கான ஆயிரக்கணக்கான கருப்பசாமி பக்தர்கள் தவமிருந்து காத்து கிடக்கும் காட்சிகளை அங்கே காணலாம்.
இந்தப் பிரதான சிவலிங்கத்தை சுற்றி எட்டு திசைகளிலும் 8 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டு வருவதோடு இக்கோவிலில் துணிவைத்தரும் வாயுபுத்திரனாகிய ஆஞ்சநேயரின் சிலை அமைந்துள்ளது. அதன் அருகில் சுவாமியின் திருவடிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்
அம்மாவாசை, பவுர்ணமி தினங்களில் இக்கோவிலில் நடைபெறும் பூஜையின் போது கருப்பன் உக்ரத்துடன் மனித உருவில் குறி சொல்லும் நிகழ்வு நடப்பதால பக்தர்கள் அன்றைய தினம் தங்கள் குறைகளை நீங்க குறிசொல் சம்பவத்தில் பங்கேற்கின்றனர்
தோப்பு கருப்புசாமி ஆலயத்தில் தை மாதம் அம்மாவாசை அன்று கருப்பு சுவாமிக்கு சிறப்பு வேள்வி யாகம் மற்றும் ஊஞ்சல் சேவை நாடைபெறும் போது பலரது மேனிகளில் சுடலைசாமி வருவதாகவும், சிலரது கண்களில் சுடலைசாமி குதிரையில் ஊர்வலமாக செல்வதையும் காணமுடிவதாக கூறப்படுகிறது.
இந்த தோப்பு கருப்பசாமி இப்பகுதி கிராம மக்களுக்கு குல தெய்வமாக விளங்கி வருவதோடு. எந்த விபத்துக்களும், துர்மரணங்களும்,ஏற்படாமல் காத்து வருகிறார்.
துஷ்ட தேவதைகளில் இருந்தும், கஷ்ட நிலைகளில் இருந்தும் பக்தர்களை காத்து வரும் இந்த கருப்ப சாமியின் உருவத்தை கண்டதுமே தீமைகள் விலகி நன்மைகள் பெருகும் என்கின்றனர் பலனடைந்த பக்தர்கள்.
உருவமாகவும் அருவமாகவும் பக்தர்களின் கண்ணுக்கு தெரியும் இந்த காவல் தெய்வங்களை வணங்கிச்செல்வோருக்கு எந்த விபத்துக்களும் நேர்வதில்லையாம்.
மக்களை காக்கும் இந்த மகா தெய்வத்தை வணங்கி வழிபடுவோம் மனத்துணிவோடு வாழ்வோம்.
மாலை முரசு செய்திகளுக்காக செய்தியாளர் சரத் மற்றும், ஒளிப்பதிவாளர் சீனிவாசனுடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்