தாய்லாந்து முதல் ஆப்கானிஸ்தான் வரை... விநாயகர் வழிபாட்டின் வியக்க வைக்கும் வரலாறு!

பௌத்த மதப் பரவலின்போது, விநாயகரின் உருவங்கள் 'கங்கிதென்' (Kangiten) அல்லது 'விநாயகப் பிரபு' என்ற பெயர்களில் சீனப் பௌத்தப் பிரிவுகளில் நுழைந்து வழிபடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து முதல் ஆப்கானிஸ்தான் வரை வணங்கப்பட்ட விநாயகர்... வரலாறு தெரியுமா?
தாய்லாந்து முதல் ஆப்கானிஸ்தான் வரை வணங்கப்பட்ட விநாயகர்... வரலாறு தெரியுமா?
Published on
Updated on
3 min read

இந்தியா மட்டுமல்லாமல், தெற்காசியா முழுவதும் யானை முகம் கொண்ட விநாயகரை வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சில நாடுகளில் இப்போது அந்த வழக்கம் இல்லை என்றாலும், புராதனக் காலத்தில் அத்தகைய வழிபாடுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அப்படி பிற நாடுகளில் உள்ள முக்கியமான விநாயகர் கோவில்கள் பற்றிக் காணலாம்.

கம்போடியா

கம்போடியாவில், 6-ஆம் நூற்றாண்டிலிருந்து விநாயகரை வழிபட்டு வந்துள்ளனர். குறிப்பாக, அங்கே இந்து மதத்தை விரிவுபடுத்திய கெமர் பேரரசு காலத்தில் கோவில்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அந்த நாட்டில் யானைத் தலை மற்றும் மனித உடலுடன், நிமிர்ந்து நிற்பது போன்ற தோற்றத்தில் விநாயகர் காட்சியளிப்பார். தடைகளை நீக்கும் கடவுளாக அவர் பார்க்கப்படுகிறார்.

விநாயகர்  - கம்போடியா
விநாயகர் - கம்போடியா

தாய்லாந்து

தாய்லாந்தில், விநாயகர் ஃபிரா ஃபிகானெட் (Phra Phikanet) அல்லது ஃபிரா ஃபிகனேசுவான் (Phikanesuan) என்று போற்றப்படுகிறார். இந்தியாவைப் போலவே, விநாயகரை அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் அளிப்பவராகக் கருதுகிறார்கள்.

தாய்லாந்தில் விநாயகரை இந்து மதத்தின் வழக்கப்படி மட்டும் வழிபடுவதில்லை. தாய் புத்த மதத்தினரும் வெற்றி தரும் கடவுளாக அவரை வணங்குகின்றனர். மதங்களைக் கடந்து, பாரம்பரியத்தில் காலூன்றிய கடவுளாக விநாயகர் உள்ளார்.

கலாச்சார நகரமான சாச்சோங்சாவோ, "தாய்லாந்தில் உள்ள விநாயகரின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. அங்கே Wat Phrong Akat எனப்படும் 49 மீட்டர் உயரமான புகழ்பெற்ற விநாயகர் சிலை உள்ளது. விநாயகர் படுத்த நிலையில் இருக்கும் பிரம்மாண்டமான சிலையும், Khlong Khuean Ganesh International Park என்ற இடத்தில் நின்ற நிலையில் இருக்கும் மிகப் பெரிய சிலையும் உள்ளன.

 Wat Phrong Akat - தாய்லாந்து
Wat Phrong Akat - தாய்லாந்து

தாய்லாந்தில் விநாயகர் வெறும் மதக் கடவுளாக மட்டுமல்லாமல், கலை மற்றும் கல்வியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார். அந்த நாட்டு அரசாங்கத்தின் நுண்கலைத் துறையின் சின்னத்தின் ஒரு பகுதியாகவும் விநாயகர் உள்ளார்.

சீனா

வட சீனாவில் பழமையான விநாயகர் சிலைகளும் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பௌத்த மதப் பரவலின்போது, விநாயகரின் உருவங்கள் 'கங்கிதென்' (Kangiten) அல்லது 'விநாயகப் பிரபு' என்ற பெயர்களில் சீனப் பௌத்தப் பிரிவுகளில் நுழைந்து வழிபடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில இடங்களில் விநாயகர் எதிர்மறை சக்தியாக அல்லது பாதுகாப்புத் தெய்வமாகப் பார்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 'காங்கிதென்' (Kangiten)
'காங்கிதென்' (Kangiten)

ஜப்பான்

இந்தியாவிலிருந்து சீனா வழியாக ஜப்பானுக்குப் பௌத்த மதம் சென்றபோதே, யானை முகம் கொண்ட கடவுளான விநாயகரும் அங்கு சென்றுள்ளார்.

ஜப்பானிய பௌத்த மரபில் விநாயகர் 'காங்கிதென்' (Kangiten) அல்லது 'ஷோதென்' (Shōten) என்று அழைக்கப்படுகிறார்.

ஜப்பானில் விநாயகர் பெரும்பாலும் இரண்டு யானை முகக் கடவுள்கள் ஒன்றையொன்று கட்டிப்பிடித்திருப்பது போன்ற சிறப்புமிக்க 'ஆலிங்கனத் திருவுருவில்' (Embracing Kangiten) சித்தரிக்கப்படுகிறார்.

டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற பழமையான அசகுசா ஷோதென் கோவில் மற்றும் நாரா மாகாணத்தில் அமைந்துள்ள இகோமா சான்ஜோஜி ஆகிய தலங்கள் முக்கிய வழிபாட்டு மையங்களாகும்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் 5-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை இந்து மதமும் பௌத்த மதமும் செழித்திருந்தன. அந்தக் காலத்தில் விநாயகர் வழிபாடும் நடந்து வந்தது.

ஆப்கானிஸ்தானின் கார்தேஸ் (Gardez) பகுதியில் 5-ஆம் அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக அரிதான பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது 'மகாவிநாயகர்' சிலை என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் விநாயகர் கம்பீரமான உடலமைப்புடனும், பழங்கால ஆப்கானிய அரசர்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களுடனும் காட்சியளிக்கிறார்.

Gardez விநாயகர்
Gardez விநாயகர்

திபெத்

திபெத்திய பௌத்தத்தில் (Tibetan Buddhism) விநாயகர் மிகவும் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். அவரை 'ட்சோக் கி தக் போ' என்று அழைக்கின்றனர்.

திபெத்திய வஜ்ரயான மற்றும் தாந்திரீக பௌத்தப் பிரிவுகளில் விநாயகர் ஒரு முக்கியக் காவல் தெய்வமாகவும் (Dharmapala), செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை அருளும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.

ஓவியங்கள் (Thangka paintings) மற்றும் சிற்பங்களில் விநாயகர் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில், 12 கரங்களுடன், பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவாறு சித்தரிக்கப்படுகிறார். தாமரை அல்லது தனது வாகனமான எலியின் மீது விநாயகர் நின்று நடனமாடுவது போன்ற ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

தாய்லாந்து முதல் ஆப்கானிஸ்தான் வரை வணங்கப்பட்ட விநாயகர்... வரலாறு தெரியுமா?
எரிமலை விளிம்பில் விநாயகர்.. 700 ஆண்டு பழமையான கோவில் - எங்கு இருக்கிறது தெரியுமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com